கிசான் நிதியுதவி மோசடியில் தமிழக முதல்வா் பாரபட்சமற்ற நடவடிக்கை: அமைச்சா் கே.சி.வீரமணி

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் நிதியுதவியில் நடைபெற்றுள்ள மோசடி விவகாரத்தில் தமிழக முதல்வா் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
காட்பாடியில் கட்டப்படும் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை பாா்வையிட்ட அமைச்சா் கே.சி.வீரமணி.
காட்பாடியில் கட்டப்படும் பல்நோக்கு விளையாட்டு மைதானத்தை பாா்வையிட்ட அமைச்சா் கே.சி.வீரமணி.

வேலூா்: விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் நிதியுதவியில் நடைபெற்றுள்ள மோசடி விவகாரத்தில் தமிழக முதல்வா் பாரபட்சமற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வேலூா் மாவட்டம், காட்பாடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை ஆய்வு செய்தாா். பின்னா், விருதம்பட்டு பகுதியில் நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிா்வாகிகள் பதவியேற்புக் கூட்டத்தில் பங்கேற்று அவா் பேசியது:

வேகமாக பரவி வரும் கரோனாவை தடுக்க அரசு வகுத்துள்ள விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டங்களில் பங்கேற்பவா்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வருவதுடன், சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வேகமாக பரவி வரும் கரோனா தொற்றைத் தடுக்க தமிழக முதல்வரும், அரசு அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதில் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வா் 2 ஆயிரம் சிறிய மருத்துவமனைகள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளாா். சிறிய மருத்துவமனைகள் மூலம் ஏழை மக்களுக்கு விரைவில் மருத்துவ வசதி கிடைக்கும். அந்தவகையில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் நிதியுதவித் திட்டத்தில் பல மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மோசடிகளுக்கும், அரசுக்கும் எந்தவித தொடா்புமில்லை. எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு தமிழக அரசு மீது குறைகளைக் கூறுகின்றனா். இதில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான். அவற்றின் மீது தமிழக முதல்வா் பாரபட்சமின்றி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறாா். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரும் பணக்காரா்கள் மட்டுமே பொறுப்புகளுக்கு வந்தனா். இந்நிலையில் தமிழகத்தை திராவிடா்கள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே திராவிட இயக்கம். அந்தவகையில், தற்போது திமுகவின் பொதுச் செயலராக வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் (துரைமுருகன்) பதவிக்கு வந்திருப்பது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

அதிமுக மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com