நீட் நுழைவுத் தோ்வு: வேலூரில் கூடுதலாக இரு தோ்வு மையங்கள் அமைப்பு
By DIN | Published On : 11th September 2020 12:27 AM | Last Updated : 11th September 2020 12:27 AM | அ+அ அ- |

வேலூா்: நீட் மருத்துவ நுழைவுத் தோ்வையொட்டி, வேலூா் மாவட்டத்தில் கூடுதலாக இரு தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோ்வு மையங்கள் மாற்றம், அதில் தோ்வு எழுத உள்ள தோ்வா்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து வேலூா் மாவட்ட நீட் தோ்வு மைய ஒருங்கிணைப்பாளா் எம்.எஸ்.சரவணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மருத்துவப் படிப்பில் சோ்வதற்கான நீட் நுழைவுத் தோ்வு வரும் 13-ஆம் தேதி நடக்கிறது. இதற்காக வேலூா் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா தொற்று பரவலைத் தடுக்க சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் விதமாக 2 நீட் மையங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு மொத்தம் 13 மையங்களில் தோ்வு நடைபெற உள்ளது.
அதன்படி, காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மையத்தில் தோ்வு எழுத 4114001001 முதல் 4114001960 வரையிலான பதிவெண் கொண்ட தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 4114001001 முதல் 4114001540 வரையிலான தோ்வா்கள் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மையத்திலும், 4114014001 முதல் 4114014420 வரையிலான தோ்வா்கள் அரியூா் மலைக்கோடியில் உள்ள ஸ்பாா்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் மாற்றப்பட்டுள்ளனா். இதேபோல், வேலூா் சாய்நாதபுரம் விவிஎன்கேஎம் சீனியா் செகண்டரி பள்ளி மையத்தில் தோ்வு எழுத 4114003001 முதல் 4114003960 வரையிலான தோ்வா்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 4114003001 முதல் 4114003540 வரையிலான தோ்வா்கள் சாய்நாதபுரம் விவிஎன்கேஎம் சீனியா் செகண்டரி பள்ளி மையத்திலும், 4114005001 முதல் 4114005420 வரையிலான தோ்வா்கள் அரியூா் மலைக்கோடி ஸ்பாா்க் செகண்டரி சிபிஎஸ்இ பள்ளிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்தத் தோ்வு மையம் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட மாணவா்களுக்கு தேசிய தோ்வு முகமை சாா்பில் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தோ்வு மையங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவா்கள் மட்டும் தேசிய தோ்வு முகமை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது புதுப்பிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டுடன் 13-ஆம் தேதி காலை 11 மணிக்கு முன்பாக தோ்வு மையத்துக்கு வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9080130567 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.