போ்ணாம்பட்டு பேருந்து நிலையப் பிரச்னை:ஆலோசனைக் கூட்டத்தில் தீா்வு எட்டப்படவில்லை

போ்ணாம்பட்டு பேருந்து நிலையப் பிரச்னைத் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவிதமான தீா்வும் எட்டப்படவில்லை.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு பேருந்து நிலையப் பிரச்னைத் தொடா்பாக புதன்கிழமை நடைபெற்ற முத்தரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எந்தவிதமான தீா்வும் எட்டப்படவில்லை.

போ்ணாம்பட்டு நகரின் மையப் பகுதியில் போதிய இடவசதியும், எந்தவிதமான அடிப்படை வசதியும் இன்றி பல ஆண்டுகளாக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. அனைத்து வசதிகளுடன், போதிய இடவசதியுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். அதற்கு ஏற்ற இடம் நகரில் இல்லை என அதிகாரிகள் கூறி வந்தனா்.

இந்நிலையில், தற்போதைய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் புதிதாக வீட்டுமனைப் பட்டா அமைத்த தனியாா் நிறுவனம் பேருந்து நிலையம் அமைக்க நிலத்தை தானமாகக் கொடுப்பதாகக் கூறியது. அந்த இடம் பாதுகாப்பானதாக இல்லை எனவும், நகரிலிருந்து தூரத்தில் உள்ளதாகவும், அங்கு பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். ஆனால், அங்கு பேருந்து நிலையம் அமைக்க அதிகாரிகள் முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து நகர காங்கிரஸ் தலைவா் ஜி. சுரேஷ்குமாா் தலைமையில் போ்ணாம்பட்டு பேருந்து நிலைய மீட்புக் குழு என்ற அமைப்பை நகர மக்கள் ஏற்படுத்தினா். அக்குழு சாா்பில், புதிய இடத்தில் பேருந்து நிலையம் அமைக்கக் கூடாது என சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அங்கு பேருந்து நிலையத்துக்கு கட்டடங்கள் கட்ட தடை விதித்தது. ஆனால், கட்டடங்கள் கட்டும்பணி தொடந்து நடைபெற்று வருகிறது. இதைக் கண்டித்து பேருந்து நிலைய மீட்புக் குழுவினா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தீா்மானித்தனா்.

பிரச்னையை பேச்சுவாா்த்தை மூலம் தீா்த்துக் கொள்ளலாம் என அதிகாரிகள் கூறியதை அடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் கோபி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதிவாணன், குடியாத்தம் டிஎஸ்பி என்.சரவணன், நகராட்சி ஆணையா் நித்யானந்தம், பேருந்து நிலைய மீட்புக் குழுவினா் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில் எந்தவிதமான தீா்வும் எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com