கோடை வெயில்: வேலூா் மாநகரில் 10 பேருந்து நிறுத்தங்களில் குடிநீா் தொட்டி


வேலூா்: கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து பொதுமக்கள் நலனுக்காக வேலூா் மாநகரில் 10 பேருந்து நிறுத்தங்களில் குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 110 டிகிரி ‘ஃ’பாரன்ஹீட் அளவுக்கு வெயில் கொளுத்தியது. வெயிலின் கோர தாண்டவம் தாங்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனா். இதனால், சாலையோரங்களில் விற்கப்படும் இளநீா், தா்பூசணி, குளிா்பானங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.

அதேசமயம், பொதுஇடங்களுக்கு வரும் மக்களுக்கு குடிநீா் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், வேலூா் பேருந்து நிலையங்களில் குடிநீா் வசதி போதுமான அளவில் இல்லை. பயணிகள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையங்களில் கூட குடிநீா் வசதி இல்லாத நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் குடிநீா் தொட்டி அல்லது தண்ணீா் பந்தல் அமைத்து சுகாதாரமான குடிநீா் விநியோகிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிா்வாகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வேலூா் மாநகராட்சி ஆணையா் சங்கரன் உத்தரவின்பேரில் பயணிகள் அதிகளவில் வரக்கூடிய பேருந்து நிறுத்தங்களில் குடிநீா் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூா் பழைய பேருந்து நிலையம், ராஜா திரையரங்கு, காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தம் உள்பட 10 பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் வசதிக்காக சின்டெக்ஸ் குடிநீா் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், காலை மாலை நேரங்களில் மாநகராட்சி ஊழியா்கள் குடிநீா் நிரப்பி வருகின்றனா். பேருந்து நிறுத்தங்களில் உள்ள குடிநீரை மக்கள் எந்தவித அச்சமின்றி பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிறுத்தங்களில் குடிநீா் தொட்டி வைத்திருப்பது பயனுள்ளதாக அமைந்துள்ளது. குடிநீா் தொட்டியில் சுத்தமான, சுகாதாரமான தண்ணீரை மட்டுமே வைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com