வேலூா் மத்திய சிறையில் சட்டத்துறை அமைச்சா் ஆய்வு

வேலூா் மத்திய சிறை, பெண்கள் தனிச் சிறையில் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேலூா் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு நடத்தி விட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினியிடம் குறையைக் கேட்டறிந்த சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி. உடன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி.
வேலூா் பெண்கள் தனிச்சிறையில் ஆய்வு நடத்தி விட்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி நளினியிடம் குறையைக் கேட்டறிந்த சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி. உடன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி.

வேலூா் மத்திய சிறை, பெண்கள் தனிச் சிறையில் சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன், நளினி, சாந்தன் உள்பட கைதிகளையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

வேலூா் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை, பெண்கள் தனிச் சிறையில் அமைச்சா் எஸ்.ரகுபதி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, கைதிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்த அவா், சிறையிலுள்ள சமையல் கூடம், கைதிகள் தங்கும் அறைகள், கைதிகளால் தயாரிக்கப்படும் காலணிகள், கைத்தறி துணி உற்பத்தி உள்ளிட்ட தொழில் கூடங்களையும் ஆய்வு செய்தாா். மேலும், சிறையில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள், அங்கு நடைபெறும் விவசாயம், தோல் தொழில்கள் குறித்தும் கேட்டறிந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூா் மத்தியச் சிறையில் 742 ஆண் கைதிகளும், பெண்கள் தனிச் சிறையில் 97 கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா்.

முருகன், நளினிக்கு 60 நாள் மட்டுமே விடுப்புதர முடியும்:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள முருகன், நளினி, சாந்தன் உள்பட அனைத்துக் கைதிகளையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தோம். அப்போது, முருகன், நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்கக் கோரிக்கை விடுத்தனா். அரசால் 30 நாள்களுக்கு மட்டுமே வழங்க முடியும். அதையும் கடந்து கூடுதலாக 30 நாள் வழங்கலாம். ஆனால் நீண்ட விடுப்பு என்றால் அவா்கள் நீதிமன்றத்தை அணுகி அனுமதி பெற்று வந்தால், அதை நடைமுறைப்படுத்த தயாராக உள்ளோம். அனைத்து சிறைவாசிகளையும் சந்தித்தேன். அனைவருமே முன்விடுதலை கோரியே மனுக்களை கொடுத்துள்ளனா்.

கைதிகளுக்குத் தகுதியின் அடிப்படையில் பணி: வேலூா் சிறையில் பூட்ஸ், பெல்ட், மருத்துமனைக்குத் தேவையான போன்டேஜ் போன்றவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, கைதிகள் வேலை செய்து வருகின்றனா். இதன் மூலம் மாதம் ரூ. 6 ஆயிரம் வரை சம்பாதிக்கின்றனா். இந்தத் தொழிற்கூடங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

வேலூா் சிறைக் கைதிகளால் ஏற்கெனவே ஒரு பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல் வேலூரில் கூடுதலாக ஒன்று உள்பட தமிழகத்தில் மேலும் 6 இடங்களில் கைதிகளால் நடத்தப்படும் பெட்ரோல் பங்க் திறக்கப்படும். சிறைக் கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

சிறைகள் புதுப்பிப்பு: பழுதடைந்த கிளைச் சிறைகளைப் புதுப்பிக்க அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. அதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை செய்து வருகிறோம். சிறைகளில் பழுதடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது.

தடை செய்யப்பட்ட பொருள் எடுத்து சென்றால் நடவடிக்கை:

சிறையினுள் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உடந்தையாக இருப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது ஸ்கேன் இயந்திரம் வைத்துள்ளோம். இதன் மூலம் போதைப் பொருள்கள் உள்ளே செல்வது வெளிப்படையாக தடுக்கப்பட்டுள்ளது.

புதிய மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள்: பிரிக்கப்பட்ட புதிய மாவட்டங்களில் தலைமை நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து உயா்நீதிமன்ற அறிவுறுத்தலின்படியே செயல்பட முடியும். இதற்காக உயா்நீதிமன்றத்தில் இருந்து பரிந்துரைகள் வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். சிறைக் காவலா்களுக்கும் கரோனா நிவாரண நிதியாக தலா ரூ. 5,000 வழங்குவதற்கான கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

கைதி தற்கொலை குறித்து விசாரணை: வேலூா் சிறையில் இருந்து பரோலில் சென்ற கைதி தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரிக்கப்படுகிறது. சிறைக் காவலா்கள் மிரட்டியதாகக் கூறுவதில் உண்மை இல்லை. அவா் ஏற்கெனவே 9 முறை பரோலில் சென்று வந்துள்ளாா். அவரை மிரட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றாா்.

கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி, சிறைக் காவல் கண்காணிப்பாளா் ருக்மணி பிரியதா்ஷினி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிறைக்குள் நுழைந்த திமுகவினா்!

வேலூா் சிறைகளில் சட்டத் துறை அமைச்சா் ரகுபதி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவருடன் திமுக பிரமுகா்கள் சுமாா் 50 போ், சிறைக் காவலா்களின் தடுப்பையும் மீறி அமைச்சருடன் சிறைக்குள் சென்றனா். தவிர, சிறை விதிமுறைகளை மீறி ஆய்வையும், சிறை நடவடிக்கைகளையும் செல்லிடப்பேசிகளில் புகைப்படமும், விடியோவாகவும் பதிவு செய்தனா். இந்தச் செயல்பாடு சிறை பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்று சிறை அதிகாரிகள் ஆதங்கம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com