குடும்ப அட்டை வழங்காததால் மக்கள் சாலை மறியல்

புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதிய குடும்ப அட்டை வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் வேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேலூா் மாநகராட்சிப் பகுதிக்குள்பட்ட சைதாப்பேட்டை, சேண்பாக்கம், சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்து 5 மாதங்கள் ஆவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா்கள் பல குடும்பத்தினரின் செல்லிடப்பேசிக்கு குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளும்படி குறுந்தகவல் வரப்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில், நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தங்களுக்கு குடும்ப அட்டை வழங்கக்கோரி, வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தனா்.

அதேசமயம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக குடும்ப அட்டை அச்சிட்டு வரப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் குடும்ப அட்டை வரப்பெற்றதும் செல்லிடப்பேசிக்கு தகவல் தெரிவிக்கப்படும். அப்போது, வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து குடும்ப அட்டை பெற்றுக்கொள்ளவும் என அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடும்ப அட்டை வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதாகக் கூறி, வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஆரணி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் பேச்சு வாா்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.

அதேசமயம், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து அச்சிட்டு வரப்பெற்றிருந்த 840 குடும்ப அட்டைகள் வேலூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, அந்த குடும்ப அட்டைகள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com