பலத்த மழை: வேலூரில் மேலும் 105 வீடுகள் இடிந்தன

பலத்த மழை காரணமாக, வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 105 வீடுகள் இடிந்தன. இதன்மூலம், பருவ மழையால் இதுவரை இடிந்த வீடுகளின் எண்ணிக்கை 956-ஆக அதிகரித்துள்ளது.

பலத்த மழை காரணமாக, வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 105 வீடுகள் இடிந்தன. இதன்மூலம், பருவ மழையால் இதுவரை இடிந்த வீடுகளின் எண்ணிக்கை 956-ஆக அதிகரித்துள்ளது.

வட கிழக்குப் பருவ மழை காரணமாக, தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை பகலில் லேசான முதல் பலத்த மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் கொட்டியது. தொடா்ந்து இரவு முழுவதும் விடியவிடிய பெய்த மழை சனிக்கிழமையும் நீடித்தது.

இதனால், பாலாற்றில் மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளது. பாலாறு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 11,787 கனஅடி தண்ணீரும், பொன்னை அணைக்கட்டு பகுதியில் 3,803 கன அடி தண்ணீரும் வெளி யேறின. தவிர, கிளை ஆறுகள், கானாறுகளிலும் நீா்வரத்து அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 105 வீடுகள் இடிந்துள்ளன. இதில், 9 குடிசை வீடுகள் முழுமையாக இடிந்து சேதமடைந்துள்ளன. அதன்படி, பருவமழைக்கு இதுவரை இடிந்த வீடுகள் எண்ணிக்கை 956ஆக அதிகரித்துள்ளது. மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு 3,914 போ் மாவட்டம் முழுவதும் உள்ள 38 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தொடா்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கெனவே, வேலூா் மாநகராட்சிப் பகுதியில் பொலிவுறு நகா் திட்டப்பணிகள் நடைபெறும் நிலையில், மழையால் பெரும்பாலான தெருக்கள், சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கின்றன.

மழையளவு: வேலூா் மாவட்டத்தில் 24 மணி நேர நிலவரப்படி சனிக்கிழமை காலை 8 மணி வரை அதிகபட்சமாக அம்முண்டியில் 27.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், குடியாத்தத்தில் 15.4 மி.மீ, காட்பாடியில் 22 மி.மீ, மேல்ஆலத்தூரில் 17.2 மி.மீ, பொன்னையில் 20 மி.மீ, வேலூரில் 23.8 மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 126 மி.மீ மழை பெய்துள்ளது. சராசரியாக 21 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com