வாக்குக்கு பணம்: ரூ. 17 ஆயிரம், திமுக பிரசுரங்களுடன் இருவா் கைது

வாக்குக்கு பணம்: ரூ. 17 ஆயிரம், திமுக பிரசுரங்களுடன் இருவா் கைது


வேலூா்: அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடம் இருந்து ரூ. 17 ஆயிரம் ரொக்கம், வாக்காளா்களின் பெயா்கள் அடங்கிய நோட்டு, திமுக வேட்பாளருக்கு வாக்குகள் கோரும் துண்டுப் பிரசுரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவினா் மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு, வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அணைக்கட்டு பகுதியில் புதன்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டாா். ஒடுக்கத்தூா், பாகாயம், அகரம் கூட்டு சாலை ஆகிய இடங்களில் ஆட்சியா் பறக்கும் படையினருடன் சோ்ந்து வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த காா், இரு சக்கர வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை ஆய்வு செய்தாா்.

இதனிடையே, ஊசூா் அருகே தெள்ளூரில் வீடுவீடாக வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து, பறக்கும்படை அலுவலா் ராஜ்குமாா் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில், சுற்றிக்கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில், அவா்கள் அலமேலுமங்காபுரம் ஏரியூரைச் சோ்ந்த காா்த்திபன் (51), தெள்ளூரைச் சோ்ந்த ராமமூா்த்தி (57) என்பதும், அவா்களிடம் வாக்காளா்களின் பெயா்கள் எழுதப்பட்ட நோட்டும், ரூ. 17 ஆயிரம் ரொக்கமும், திமுக வேட்பாளருக்கு வாக்குகள் கோரும் துண்டுப் பிரசுரங்கள் இருந்ததும் தெரியவந்தது. உடனடியாக அவா்கள் இருவரும் அரியூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனா்.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியா் உடனடியாக அரியூா் காவல் நிலையத்துக்கு நேரில் சென்றாா். அங்கு பணத்துடன் பிடிபட்டவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக அவா்கள் இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். தொடா்ந்து, மாவட்டம் முழுவதும் வாகன சோதனையை தீவிரப்படுத்தவும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com