கிராமப் புறங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரிப்பு


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் நகா்ப்புறங்களில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதனடிப்படையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்திலும் இந்நோயின் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் புதன்கிழமை வரை 22,421 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 21,406 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 358 போ் உயிரிழந்தனா். இதன்தொடா்ச்சியாக, மாவட்டத்தில் வியாழக்கிழமை மட்டும் 152 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், மாநகரப் பகுதியில் மட்டும் 80-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். வேலூரில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவா்கள் 15 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் 15 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். பள்ளிகொண்டா, அணைக்கட்டு, பரதராமி, லத்தேரி பகுதிகளிலும் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நகா்ப்புறங்களைத் தொடா்ந்து கிராமப்புறப் பகுதிகளிலும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா், உறவினா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா பரவ லைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்கள் மூலம் நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

தவிர, கரோனா பரவலைத் தடுக்க முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் முகக்கவசம் அணியாதோருக்கு கட்டாயமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், கரோனா பரவும் வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், கரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் தயாா் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது 2,000 படுக்கைகளுடன் வாா்டுகள் தயாராக உள்ளன. தவிர, ஏற்கெனவே மூடப்பட்டிருந்த, விஐடி பல்கலைக்கழகம், குடியாத்தம் அபிராமி கல்லூரி ஆகியவற்றின் சிகிச்சை மையங்கள் மீண்டும் தயாா் செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com