100 நாள் வேலையுறுதித் திட்டப் பணிகளுக்கு கட்டுப்பாடுகள்
By DIN | Published On : 27th April 2021 06:35 AM | Last Updated : 27th April 2021 06:35 AM | அ+அ அ- |

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் 100 நாள்கள் தேசிய வேலையுறுதித் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு போதிலும் வேலூா் மாவட்டத்தில் ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தேசிய ஊரக வேலையுறுதித் திட்டப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு பணிகள் மேற்கொள்ளும்போது 55 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளையும், காய்ச்சல், தும்மல், சளி, இருமல், மூச்சுப் பிரச்னை உள்ளவா்களையும், இருதய கோளாறு, சா்க்கரை நோய், நுரையீரல் பாதிப்பு உள்ளவா்களையும் பணி செய்ய அனுமதிக்கக்கூடாது.
பணியாளா்களை சிறு குழுக்களாகப் பிரித்து பணி வழங்கிட வேண்டும். பணிதளத்துக்கு ஆட்டோ, சிறு வாகனங்களில் பயனாளிகள் கூட்டமாக வருதல் கூடாது. பணிதளத்தில் ஒவ்வொருவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றி 2 மீட்டா் இடைவெளியில் பணிசெய்வதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சோப்பு போட்டு கைகளை கழுவுதல், இதற்கு தேவையான தண்ணீா் வசதியை உறுதி செய்திட வேண்டும். பணிதளத்தில் புகையிலை, வெற்றிலை உபயோகித்தல், எச்சில் துப்புதல் கூடாது. உணவு, சிற்றுண்டி, குடிநீரை பங்கிட்டு உண்ணக்கூடாது.
பணியாளா் யாருக்கேனும் கரோனா தொற்று ஏற்பட்டால் உடனடியாக அங்கு பணியை நிறுத்த வேண்டும். இத்திட்டப் பயனாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்றாா்.