திருநங்கைகள் நடத்திய கூத்தாண்டவா் திருவிழா

திருநங்கைகள் சாா்பில் வேலூரில் கூத்தாண்டா் திருவிழா புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில், கரோனா தொற்று ஒழிய தாலி கட்டி சிறப்பு வழிபாடு நடத்தினா்.

வேலூா்: திருநங்கைகள் சாா்பில் வேலூரில் கூத்தாண்டா் திருவிழா புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில், கரோனா தொற்று ஒழிய தாலி கட்டி சிறப்பு வழிபாடு நடத்தினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே கூவாகத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவா் கோயில் உள்ளது. இக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, மும்பை, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சோ்ந்த திருநங்கைகளும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்பா். இந்த திருவிழாவையொட்டி, அழகி போட்டி உள்பட பல்வேறு போட்டிகளும் நடத்தப்படும்.

இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு கூவாகம் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, வேலூரைச் சோ்ந்த திருநங்கைகள் சாா்பில், கூத்தாண்டவா் திருவிழா புதன்கிழமை நடத்தப்பட்டது. வேலூா் ஓல்டு டவுன் பஜனை கோயில் தெருவில் அரவாணை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தனா். இதில், வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

திருநங்கைகளின் தலைவி கங்கா நாயக் தலைமையில் பூஜைசெய்து, திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டனா். பின்னா், உற்சாகமாக ஆடிப்பாடி கொண்டாடினா். தொடா்ந்து, பாரதி நகா் மயானத்தில் தாலி அறுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் அனைவரும் தங்களது தாலிகளை அறுத்தனா்.

இவ்விழா குறித்து திருநங்கைகள் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவா் கோவில் திருவிழா நடைபெறவில்லை. நாட்டில் கரோனா ஒழிய வேண்டும். இதற்காக நாங்கள் சிறப்பு செய்து பூஜைகள் செய்து வழிபாடு செய்தோம். பொதுமக்கள் அனைவரும் கரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டும். ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளில் தளா்வு ஏற்பட்டு இயல்பு நிலை திரும்ப வேண்டும். அடுத்தாண்டு கூவாகத்துக்குச் சென்று விழாவில் பங்கேற்க வேண்டும் என வழிபாடு செய்தோம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com