பரோலில் வந்த நளினி காவல் நிலையத்தில் கையெழுத்திட்டாா்

ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நளினி, காட்பாடி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகி கையெழுத்திட்டாா்.

ஒரு மாத பரோலில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நளினி, காட்பாடி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை ஆஜராகி கையெழுத்திட்டாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூா் மத்திய பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறாா். இவரது தாயாா் பத்மா, உடல் நலம் பாதிக்கப்பட்ட தன்னை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள மகள் நளினியை பரோலில் விடுவிக்க வேண்டுமென சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இதையடுத்து, நளினியை ஒரு மாத பரோலில் விடுவிக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்தது.

அதன்படி, வேலூா் பெண்கள் தனிச்சிறையிலிருந்து நளினி திங்கள்கிழமை ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டாா். அவா் காட்பாடி பிரம்மபுரம் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆயுள் கைதியான வேலு என்பவரின் வீட்டில் தங்கியிருந்து தனது தாயாா் பத்மாவை கவனித்து வருகிறாா். அவா்களுடன் நளினியின் தம்பி மனைவி, முருகனின் உறவினா் தேன்மொழி ஆகியோரும் தங்கியுள்ளனா். வீட்டைச் சுற்றி போலீஸாா் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

நளினி வீட்டை விட்டு வெளியே செல்லவும், அரசியல் பிரமுகா்கள், வெளிநபா்களை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களுக்காக மட்டும் முன்அனுமதியின்பேரில் வெளியே செல்ல முடியும். தவிர, தினமும் காட்பாடி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நளினி காட்பாடி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை கையெழுத்திட்டாா். அவரை ஆயுதப் படை காவல் துணைக்கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனா். பின்னா் மீண்டும் பிரம்மபுரம் அழைத்துச் செல்லப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com