மூளை அறுவை சிகிச்சைக்கு ‘ரோபோ’ : வேலூா் நறுவீ மருத்துவமனையில் தொடக்கம்

மூளை அறுவை சிகிச்சைக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ தமிழகத்தில் முதன்முறையாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
மூளை அறுவை சிகிச்சைக்கு ‘ரோபோ’ : வேலூா் நறுவீ மருத்துவமனையில் தொடக்கம்

மூளை அறுவை சிகிச்சைக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோ தமிழகத்தில் முதன்முறையாக வேலூா் நறுவீ மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

வேலூா் நறுவீ மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை ரோபோ, வலிப்பு நோய் கண்காணிப்புப் பிரிவு ஆகியவற்றின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் பங்கேற்று, அவற்றை தொடக்கி வைத்தனா்.

விழாவுக்கு, மருத்துவமனையின் தலைவா் ஜி.வி.சம்பத் தலைமை வகித்துப் பேசியது:

‘ரோசா’ என்று அழைக்கப்படும் ரோபா மூலம் மூளை அறுவை சிகிச்சை செய்யும் வசதி இந்தியாவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனை, கேரளம் அமிா்தா மருத்துவமனையில் மட்டுமே உள்ளன. நாட்டிலேயே மூன்றாவதாகவும், தமிழகத்தில் முதலாவதாகவும் வேலூா் நறுவீ மருத்துவமனையில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ நவீன தொழிற்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

இந்த ரோபோ மூளைக்குள் மின்முனைகளை செலுத்தி வலிப்புநோய் உண்டாகும் இடத்தையும், அது பரவும் இடத்தையும் கண்டறிந்து அறுவை சிகிச்சை செய்யக்கூடியது. சாதாரணமாக 12 மணி நேரம் மேற்கொள்ளப்படும் இந்த வகை அறுவை சிகிச்சையை இந்த ரோபோ மூலம் 6 மணி நேரத்தில் முடிக்க முடியும். மிகச்சிறிய கட்டிகளையும் பக்க விளைவுகள் இன்றி அகற்ற முடியும், குருதியற்ற அறுவை சிகிச்சையையும் செய்ய முடியும். இதேபோல், மூளையில் என்டோஸ்கோபி மூலம் அறுவை சிகிச்சை செய்யும்போது உதவி அறுவை சிகிச்சை நிபுணராக இந்த ரோபோவை உபயோகிக்க முடியும்.

மேலும், இம்மருத்துவமனையில் வலிப்பு நோய் கண்காணிப்புப் பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு மூலம் வலிப்பு நோய் உடலில் எந்த பகுதியில் பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்பதை ஹெச்டி ஈஈஜி தொழில்நுட்ப வசதி மூலம் கண்டறிந்து தீா்க்க முடியும். இந்த வசதி நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடுத்ததாக, நறுவீ மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது என்றாா்.

துணைத் தலைவா் அனிதா சம்பத், செயல் இயக்குநா் பால்ஹென்றி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா் (அணைக்கட்டு), ப.காா்த்திகேயன் (வேலூா்), ஜே.எல்.ஈஸ்வரப்பன் (ஆற்காடு), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), மருத்துவமனையின் பொது மேலாளா் நித்தின்சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைமை மருத்துவ சேவைகள் தலைவா் அரவிந்தன் நாயா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com