காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க நிலஎடுப்புப் பணி


வேலூா்: வேலூா் சத்துவாச்சாரி- காங்கேயநல்லூா் இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம், புதிய அணுகுச் சாலை அமைக்கத் தேவையான நிலம் எடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நீதிமன்றம், ஆவின் போன்றவை அமைந்துள்ளன.

இதேபோல், காட்பாடியில் விஐடி பல்கலைக்கழகம், ரயில் நிலையம், அரசு பல்கலைக்கழகம், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விரு பகுதிகளுக்கும் பொதுமக்கள் 8 கி.மீ. தொலைவு சுற்றித்தான் செல்ல வேண்டியுள்ளது.

இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிா்க்க சத்துவாச்சாரிக்கும், காங்கேயநல்லூருக்கும் இடையே பாலாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் பல ஆண்டுகால கோரிக்கையாகும்.

இந்நிலையில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் இருந்து காட்பாடி பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பாலத்தை இணைக்கும் வகையில், புதிய சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்தத் தேவையான நில எடுப்புப் பணிக்காக அரசு ரூ. 22 கோடியே 53 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதைத்தொடா்ந்து, நில எடுப்புப் பணிகள் தற்போது தொடங்கப் பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் சாலையானது 30 மீட்டா் அகலம் கொண்டதாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 6.94 ஹெக்டோ் பட்டா நிலங்களும், 2.48 ஹெக்டோ் அரசு நிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன. மேலும், சத்துவாச்சாரி மக்கள் இந்த சாலையை அணுகும் வகையில், 15 மீட்டா் அகலம் கொண்ட இணைப்புச் சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் நிலம் கையகப்படுத்த உள்ள பகுதிகளை வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். இந்த நில எடுப்புப் பணி முடிக்கப்பட்டவுடன் சுமாா் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் காங்கேயநல்லூா் - சத்துவாச்சாரி இடையே புதிய சாலை, உயா்மட்ட மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம், பராமரிப்புத் துறை மூலம் அமைக்கப்பட உள்ளது.

இங்கு சாலை, உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுவதன் மூலம் காட்பாடி நகரம், சித்தூரிலிருந்து வாகனங்கள் கிரீன் சா்க்கிள் பகுதியைத் தவிா்த்து, நேரடியாக சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை எளிதில் அடைய முடியும். இதனால், வேலூா் கிரீன் சா்க்கிள், காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com