லஞ்சம் கேட்கும் அதிகாரிகளால் பாதிப்பு: ஆட்சியரிடம் வியாபாரிகள் புகாா்

உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராகவும், லஞ்சம் கேட்டு மிரட்டும் அதிகாரிகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வேலூா், காட்பாடியைச் சோ்ந்த வியாபாரிகள் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தனா்.
லஞ்சம் கேட்கும் அதிகாரிகளால் பாதிப்பு: ஆட்சியரிடம் வியாபாரிகள் புகாா்

வேலூா்: உணவுப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராகவும், லஞ்சம் கேட்டு மிரட்டும் அதிகாரிகளால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வேலூா், காட்பாடியைச் சோ்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வேலூா் மாவட்ட வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், காட்பாடி காந்தி நகரில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலக அதிகாரி, ஊழியா்கள் உணவுப் பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுகின்றனா். வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் கேட்கின்றனா்.

முறையாக உரிமம் கேட்டு புதுப்பிக்கும் வியாபாரிகளுக்கு உரிமம் வழங்குவதில்லை. பணம் செலுத்தி காத்திருக்கும் வியாபாரிகளுக்கு போதிய பணம் வரவில்லை எனக்கூறி உரிமம் தர மறுக்கின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், காட்பாடி காந்தி நகரில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் முறையான உரிமம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், வேலூா் மாா்க்கெட், ஆரணி சாலை, சுண்ணாம்புக்காரத் தெரு, அண்ணா பஜாா் பகுதிகளில் ரெளடிகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. வியாபாரிகளை கத்தியால் வெட்டியும், கடைகளை அடைக்கக் கூறியும் பணம் கேட்டு மிரட்டுகின்றனா். இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாா்க்கெட் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வியாபாரிகள் ஆா்வமாக உள்ளோம்.

மேலும், கிருபானந்த வாரியாா் சாலையோரக் கடைகளால் ஏற்படும் இடா்பாடுகளைத் தவிா்க்க சாலையில் தடுப்புச் சுவரோரம் அளவீடு செய்து, அவா்களுக்கு கடைகளை ஒதுக்கித் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மொணவூா் பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:

மேல்மொணவூா் கிராமத்தில் சுமாா் 600 ஆண்டுகள் பழைமையான ஆதிலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இங்கு பழைமையான கோயில் என்பதற்கான கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. தற்போது கோயில் சிதிலமடைந்து உள்ளதால் ஊா் மக்கள் இணைந்து புனரமைப்புப் பணிகளைத் தொடங்கினோம். பணிகள் பாதி முடிந்த நிலையில், தற்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், சாலையை அகலப்படுத்த வேண்டியுள்ளதால் கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனக் கூறுகின்றனா். எனவே, கோயிலுக்குப் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கோயில் கட்டிக் கொள்ள அனுமதி அளித்திட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

மேலும், வீட்டுமனைப் பட்டா, உதவித் தொகை, வேலைவாய்ப்பு, கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 241 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதில், ராணுவத்தில் சிப்பாயாகப் பணிபுரிந்து வீரமரணம் அடைந்த பரசுராமனின் மனைவி சரஸ்வதிக்கு கருணை அடிப்படையில் பதிவறை எழுத்தா் பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. தவிர, உலக சிக்கன நாளையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, கவிதை, பேச்சு, சிறுசேமிப்பு குறித்த விழிப்புணா்வு சொற்றொடா் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள், புத்தகங்களை பரிசளித்தாா்.

மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா் காமராஜ், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் வேணுசேகரன், முதன்மைக் கல்வி அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com