பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக 10 லட்சம் கரும்புகள் வருகை

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட த்துக்கு 10.57 லட்சம் கரும்புகள் வந்துள்ளன.
காட்பாடியில் உள்ள கூட்டுறவு அங்காடிக்கு லாரிகளில் வந்த கரும்புக் கட்டுகள்.
காட்பாடியில் உள்ள கூட்டுறவு அங்காடிக்கு லாரிகளில் வந்த கரும்புக் கட்டுகள்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்காக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட த்துக்கு 10.57 லட்சம் கரும்புகள் வந்துள்ளன. இவை ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சாா்பில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா ஒரு கிலோ சா்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, முந்திரி, திராட்சை மற்றும் ஒரு முழு நீள கரும்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மொத்தம் 10 லட்சத்து 57 ஆயிரத்து 245 ரேஷன் காா்டுகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இதற்காக ரூ.264 கோடியே 35 லட்சத்து 22 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ.2,500 பணத்தை ரூ.500 நோட்டுகளாகவும், கரும்பை துண்டுகளாக வழங்காமல் முழுக் கரும்பாகவும் மட்டுமே வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திங்கள்கிழமை முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கப்பட உள்ளது.

இதற்காக காட்பாடியில் உள்ள கூட்டுறவு விற்பனை அங்காடிக்கு விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரம் கரும்புகள் லாரிகள் மூலம் சனிக்கிழமை கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து 3 மாவட்டங்களிலும் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கும் கரும்புக் கட்டுகளைப் பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

கற்பகம் கூட்டுறவு அங்காடியின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தனியாக கரும்புக் கட்டுகள் இறக்கப்பட்டன. அவற்றை கொண்டு வேலூா் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 20 ஆயிரத்து 969 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக வீடு, வீடாக டோக்கன் விநியோகம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, வேலூா் தொரப்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பைகளில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பைகள் வேலூா் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com