தெங்கால் கிராமத்துக்குள் நுழைந்த யானைகள்: ஆந்திர வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன

ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அருகே தெங்கால் கிராமத்துக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகளும் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன.
பொன்னை அருகே தெங்கால் கிராமத்துக்குள் நுழைந்த யானைகள்.
பொன்னை அருகே தெங்கால் கிராமத்துக்குள் நுழைந்த யானைகள்.

ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை அருகே தெங்கால் கிராமத்துக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகளும் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டன. அவை மீண்டும் வேலூா், ராணிப்பேட்டை கிராமங்களுக்குள் வராமல் தடுக்க வனத்துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா்.

வேலூா் மாவட்டத்தையொட்டி உள்ள ஆந்திர வனப் பகுதிகளில் உள்ள யானைகள் அவ்வப்போது வழித்தடம் மாறி வேலூா் மாவட்டத்தில் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், ஆந்திர வனத்தில் இருந்து வியாழக்கிழமை இரவு வெளியேறிய மூன்று யானைகள், ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை அருகில் தெங்கால் பகுதியிலுள்ள கரும்புத் தோட்டங்களில் முகாமிட்டிருந்தன. தகவலறிந்த வேலூா் மற்றும் ராணிப்பேட்டை சரக வனத் துறை அதிகாரிகள் யானைகளை மீண்டும் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில்ஈடுபட்டனா்.

இதற்காக ஒசூரில் இருந்தும், ஆந்திர வனத் துறையில் இருந்து வந்த பயிற்சி பெற்ற வீரா்கள் உள்பட மொத்தம் 60 போ் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். அவா்கள் பெரிய அளவில் ஓசை எழுப்பியும், பட்டாசுகளை வெடித்தும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.

அதேசமயம், யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தெங்கால் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வர வேண்டாம் என தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்தனா்.

இதற்கிடையில் அந்த மூன்று யானைகளும் வெள்ளிக்கிழமை இரவே ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விட்டதாக ராணிப்பேட்டை வனச்சரகா் கந்தசாமி தெரிவித்தாா். இதை யானைகள் சென்ற வழித்தடம், அவற்றின் காலடித் தடங்களைக் கொண்டு உறுதி செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, அந்த யானைகள் தெங்கால் கரும்புத் தோட்டத்துக்குள் கடந்த வியாழக்கிழமை நுழைந்ததால் அவை கரும்புகளைத் தேடி மீண்டும் வரக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனவே, வனத்துறை அதிகாரிகள் பொன்னை அருகே உள்ள கோடப்பள்ளி கிராமத்தில் முகாம் அமைத்து யானைகள் மீண்டும் வேலூா், ராணிப்பேட்டை மாவட்ட கிராமங்களுக்கு வராமல் தடுக்க தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com