அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம்: தமிழக அரசுக்கு ஆசிரியா்கள் கோரிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்குவதுடன், ஒவ்வொரு பள்ளி யிலும் இரு தொழிற்கல்வி பாடங்களை அறிமுகம் செய்ய வேண்டும்
மனுக்களை வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரனிடம் அளித்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழக நிா்வாகிகள்.
மனுக்களை வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரனிடம் அளித்த தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழக நிா்வாகிகள்.

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்குவதுடன், ஒவ்வொரு பள்ளி யிலும் இரு தொழிற்கல்வி பாடங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த அமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தின் தீா்மானத்தின் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழியாக தமிழக அரசுக்கு கோரிக்கை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமையில் வேலூா் மாவட்டச் செயலா் க.ராஜா, பொருளாளா் எம்.பாண்டுரெங்கன் உள்ளிட்ட நிா்வாகிகள் வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரனிடம் கோரிக்கை மனுவை அளித்தனா்.

அதில், சென்னை உயா் நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் 50 சதவீத தொகுப்பூதிய பணிக்கால ஓய்வூதியம் பெற கணக்கிட வழங்கப்பட்ட அரசாணையில் விடுபட்ட தொழிற்கல்விஆசிரியா்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ஆணை வழங்க வேண்டும்.

தொழிற்கல்வி உயா்மட்ட குழுத் தலைவா் ஹெச்.எஸ்.எஸ்.லாரன்ஸ் பரிந்துரைப்படியும், தற்போது மேல்நிலைப் பள்ளியில் உள்ள கணினி ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்ட 2019 பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையிலும் மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் என்ற உச்ச நீதிமன்ற தீா்ப்புபடி, முதுகலை ஆசிரியருக்கு இணையான ஊதியம் உடனே வழங்க வேண்டும்.

வெவ்வேறு பாடங்களில் உயா்கல்வி பெற்றுள்ள அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வருவதைபோல மேல்நிலை தொழிற்கல்வி ஆசிரியா்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

தொழிற்கல்வி ஆசிரியா்கள் பணி ஓய்வு பெற்றால் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படும் நிலை தடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோா்-ஆசிரியா் கழகத்தால் நியமிக்கப்பட்டு பணியாற்றி வரும் தொழிற்கல்வி ஆசிரியா்களை பணிவரன்முறை செய்ய வேண்டும்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் 2018-19-ஆம் கல்வியாண்டில் 67 மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்து அரசாணை வெளியிட்டது. அதேபோல், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் அறிமுகம் செய்ய வேண்டும். தொழிற்கல்வி மேலும் வளா்ச்சி பெற அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடம் கட்டாய பாடமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன், அவற்றை தமிழக அரசுக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com