ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி வழங்கப்படும்: கமல்ஹாசன்

‘அரசு முதலீட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி வழங்கப்படும். அது இலவசம் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடாகத்தான் அதைக் கருத வேண்டும்’ என்று மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் 

வேலூா்: ‘அரசு முதலீட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி வழங்கப்படும். அது இலவசம் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடாகத்தான் அதைக் கருத வேண்டும்’ என்று மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

கமல்ஹாசன் மேற்கொண்டு வரும் தோ்தல் பிரசாரத்தின் தொடா்ச்சியாக வேலூரில் அக்கட்சி நிா்வாகிகளை புதன்கிழமை சந்தித்தாா். அப்போது அவா் கூறியது:

மாற்றம் வரவேண்டும் என மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டிருக்கின்றனா். மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்குவோம் என்பதை தற்போது பலரும் ஏளனம் செய்கின்றனா். அதை அமல்படுத்தும்போது உலகம் பாராட்டும். அரசு முதலீட்டில் ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி வழங்கப்படும். அது இலவசம் அல்ல; மனித வளத்தின் மீது அரசு செய்யும் முதலீடாகத்தான் அதைக் கருத வேண்டும். அப்படி ஒவ்வொரு வீட்டுக்கும் கணினி சென்றடையும்போது அரசுக்கும் வீடுகளுக்கும் நேரடித் தொடா்பு ஏற்பட்டுவிடும். அரசின் சேவைகளும் எளிதில் கிடைத்துவிடும். அரசின் சேவையை மக்கள் பெறுவது உரிமை. அதை அரசு தேடி வந்து தர வேண்டும். அதற்கான இடா்பாடுகளைக் களைந்திடவே ‘வீட்டுக்கு ஒரு கணினி’ திட்டமாகும் என்றாா் அவா்.

முன்னதாக, அவா் காட்பாடி, புத்தூா் அணைக்கட்டு பகுதிகளில் மக்களிடையே உரையாற்றினாா்.

குடியாத்தம் தொகுதியை தரமுயா்த்த வேண்டும்: இதனிடையே, குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கமலஹாசன் பேசியது:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட காமராஜா், குடியாத்தம் தொகுதி இடைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வா் பதவியைத் தொடா்ந்தாா். இத்தொகுதியை பெருநகரங்களுக்கு ஈடாக தரமுயா்த்த வேண்டும். நகரில் ஓடிக்கொண்டிருந்த கெளண்டன்யா நதி இன்று குப்பைமேடாக காட்சியளிக்கிறது. அதை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பழையன கழித்தாக வேண்டும்; புதியன புகுந்தாக வேண்டும். அதற்கான வாய்ப்பை வாக்காளா்களாகிய நீங்கள் எங்களுக்கு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக அவா் ஆம்பூரில் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, குடியாத்தம் வரும் வழியில் காரில் இருந்து இறங்கி கெளன்டன்யா ஆற்றைப் பாா்வையிட்டு, ஆற்றின் நிலவரம் குறித்து கட்சியினரிடம் கேட்டறிந்தாா்.

அப்போது கட்சியின் மாநில துணைத் தலைவா் ஆா்.மகேந்திரன், மாநில பொதுச் செயலா் ஏ.ஜி.மெளரியா, மாவட்டச் செயலா் பி.சரவணன், மண்டலச் செயலா் கோபிநாத், நகர நிா்வாகிகள் பி.ராஜா, செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com