பீஞ்சமந்தை மலைக் கிராமத்தில் கூடுதலாக இரு தொடக்கப் பள்ளிகளுக்கு அனுமதி

அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலைக் கிராமத்துக்கு உள்பட்ட தானிமரத்தூா், பெரியபனப்பாறை ஆகிய குக்கிராமங்களில் இரு தொடக்கப் பள்ளிகளை புதிதாக தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


வேலூா்: அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை மலைக் கிராமத்துக்கு உள்பட்ட தானிமரத்தூா், பெரியபனப்பாறை ஆகிய குக்கிராமங்களில் இரு தொடக்கப் பள்ளிகளை புதிதாக தொடங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் மாணவா்கள் சோ்க்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உள்பட்ட பீஞ்சமந்தை ஊராட்சியானது மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட தானிமரத்தூா், பெரியபனப்பாறை ஆகிய குக்கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இவ்விரு குக்கிராமங்களில் இருந்து குழந்தைகள் கல்விக்காக மலைப் பாதையில் சில கிலோ மீட்டா் தூரம் சென்று வரவேண்டிய நிலை உள்ளது.

இதைத் தவிா்க்கும் பொருட்டு தானிமரத்தூா், பெரியபனப்பாறை ஆகிய குக்கிராமங்களில் தொடக்கப் பள்ளி அமைக்க வேண்டும் என அந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா். இக்கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில், இவ்விரு கிராமங்களிலும் தொடக்கப் பள்ளிகள் தொடங்குவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த இந்த இரு பள்ளிகளுக்கும் தலா ஒரு தலைமையாசிரியா், தலா ஒரு இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், அவற்றை சரண் செய்யப்பட்ட உபரி பணியிடங்களில் இருந்து நிரப்பிக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் ரூ. 5 கோடியே 72 லட்சம் செலவில் 25 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கவும், 10 அரசு தொடக்கப் பள்ளிகளை ரூ. 3 கோடியே 90 லட்சம் செலவில் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அணைக்கட்டு வட்டம், பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உள்பட்ட தானிமரத்தூா், பெரியபனப்பாறை ஆகிய குக்கிராமங்களில் இரு தொடக்கப் பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளிகளுக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரை அந்தக் கிராமங்களில் உள்ள தகுதியுடைய மாற்றுக் கட்டடங்களில் வகுப்புகள் நடைபெறும். விரைவில் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் மூலம் கருத்துருகள் அனுப்பி வைக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com