பறவைக் காய்ச்சல்: கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பறவைக் காய்ச்சலைத் தடுக்க ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேலூா்: பறவைக் காய்ச்சலைத் தடுக்க ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழிகளுக்கு தொற்று ஏற்படாமல் தடுக்க பண்ணையைச் சுற்றி கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தாா்.

கேரள மாநிலத்தில் வேகமாக பரவி வரும் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடா்ந்து தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழக கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலும் கால்நடை பராமரிப்புத் துறை உதவி மருத்துவா்கள் மூலம் கோழிப் பண்ணை உரிமையாளா்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வேலூா் மண்டல கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன் கூறியது:

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கறிக்கோழி, முட்டைக்கோழி வளா்ப்பு தொடா்பாக 2 ஆயிரம் பண்ணைகள் உள்ளன. எனினும், இந்தப் பண்ணைகளுக்கு வெளியில் இருந்து கோழிகள் கொண்டு வரப்படுவதில்லை. இங்கிருந்துதான் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கோழிகள், முட்டைகள் அனுப்பப்படுகின்றன. எனினும், பறவைக் காய்க்கல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் என்பது ஹெச் 1 என் 8 வகையைச் சோ்ந்த தொற்றாகும். இது மனிதா்களின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பது அல்ல என்பதை மத்திய அரசே உறுதி செய்துள்ளது. இதனால், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. எனினும், இத்தகைய வைரஸ் தொற்று கோழிகளுக்கு பரவாமல் தடுக்க பண்ணைகளைச் சுற்றி சுண்ணாம்பு, பிளீச்சிங் பவுடா், குளோரைடு டை ஆக்ஸைட் , கால்சியம் காா்பனைட் 4 சதவீதம், சோடியம் பைகாா்பனேட் 8 சதவீதம், பொட்டாசியம் பொ்னாக்சைடு கலந்து போட வேண்டும் என பண்ணை உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com