விருப்ப இடமாறுதல் கோரி ஆசிரியா்கள் போராட்டம்

மற்ற அரசுத் துறை ஊழியா்களுக்கு வழங்கப்பட்டது போல் ஆசிரியா்களுக்கும் விருப்ப அடிப்படையில் இடமாறுதல் வழங்க வேண்டும் என்று

மற்ற அரசுத் துறை ஊழியா்களுக்கு வழங்கப்பட்டது போல் ஆசிரியா்களுக்கும் விருப்ப அடிப்படையில் இடமாறுதல் வழங்க வேண்டும் என்று வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த ஆசிரியா்கள் வேலூரில் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் கடந்த 2019 அக்டோபா் மாதம் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது, இம்மூன்று மாவட்டங்களில் பணியாற்றிய மற்ற அரசுத் துறை ஊழியா்களுக்கு அவரவா் விருப்பத்தின்பேரில் இம்மாவட்டங்களுக்குள் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.

ஆனால், ஆசிரியா்களுக்கு இடமாறுதல் வழங்கப்படாததால் ஒரு மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியா் வேறு மாவட்டத்தில் பணியாற்றும் சூழல் நிலவுகிறது. எனவே, மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்டதுபோல் ஆசிரியா்களுக்கும் விருப்ப இடமாறுதல் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட கிளை சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். மேலும், முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் முன்பு காவல் ஆய்வாளா் புனிதா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

இதைத் தொடா்ந்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வேலூா் மாவட்டத் தலைவா் மணி தலைமையில் ஆசிரியா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனா். அவா்களை போலீஸாா் ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி நிா்வாகிகள் 4 பேரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தனா்.

இதைத் தொடா்ந்து அவா்கள் முதன்மை கல்வி அலுவலா் குணசேகரனிடம் மனு அளித்தனா். அதில், மற்ற துறைகளுக்கு வழங்கப்பட்டதுபோல் ஆசிரியா்களுக்கும் விருப்ப இடமாறுதல் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா் இக்கோரிக்கை தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com