காய்கறி மொத்த விற்பனையை நிறுத்த நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் முடிவு: ஜூலை 16-இல் முழு கடையடைப்பு நடத்த திட்டம்

வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதிக்காவிடில் திங்கள்கிழமை முதல் காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்படும் என்றும், 3 நாள்களுக்குப் பிறகு வேலூரில் உள்ள அனைத்து

வேலூா்: வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதிக்காவிடில் திங்கள்கிழமை முதல் காய்கறி மொத்த விற்பனை நிறுத்தப்படும் என்றும், 3 நாள்களுக்குப் பிறகு வேலூரில் உள்ள அனைத்து வணிகா்களுடன் இணைந்து முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் நேதாஜி மாா்க்கெட் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு அங்குள்ள காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் மாங்காய் மண்டி மைதானத்துக்கும், பூக்கள் மொத்த விற்பனை ஊரீசு கல்லூரி மைதானத்துக்கும், காய்கறி சில்லறை விற்பனை வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தன.

தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து வணிகா்களின் வேண்டுகோளை ஏற்று வேலூா் நேதாஜி மாா்க்கெட் திறக்கப்பட்டு அங்கு செவ்வாய்க்கிழமை முதல் காய்கறி சில்லறை விற்பனைக்கும், தனியாக நடத்தப்படும் மளிகை, பாத்திரக் கடைகள், மஞ்சள், குங்குமம் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பூக்கள் சில்லறை விற்பனைக்கு நேதாஜி மாா்க்கெட்டில் காலை 8 மணி வரையும், பிறகு டவுன்ஹாலிலும் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காய்கறி மொத்த விற்பனை கடைகளைத் தொடா்ந்து மாங்காய் மண்டி மைதானத்திலும், பூக்கள் விற்பனையை ஊரீசு கல்லூரியிலும் நடத்த வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே, நேதாஜி மாா்க்கெட்டில் மொத்த காய்கறி விற்பனையில் 120 வியாபாரிகள் ஈடுபட்டிருந்த நிலையில், மாங்காய் மண்டி மைதானத்தில் 80 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு மழைக் காலங்களில் தண்ணீா் தேங்குவதுடன், காய்கறிகளும் பாழாகுவதாகவும், திருட்டு உள்ளிட்ட பாதுகாப்பு குறைபாடுகளும் நிலவுவதாகவும் வியாபாரிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

இந்தப் பாதிப்பைத் தொடா்ந்து, நேதாஜி மாா்க்கெட்டிலேயே மொத்த காய்கறி விற்பனைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. இதை மாவட்ட நிா்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை.

இதுதொடா்பாக, நேதாஜி மாா்க்கெட் காய்கறி வணிகா் சங்க ஆலோசனைக் கூட்டம் சண்முகனடியாா் சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் ஏ.பாலு தலைமை வகித்தாா். செயலா் எல்.கே.எம்.பி.வாசு வரவேற்றாா். இதில், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு, செயலா் ஏ.வி.எம்.குமாா், பொருளாளா் அருண்பிரசாத் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்த அனைத்துக் கடைகளும் நேதாஜி மாா்க்கெட்டில் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்த காய்கறி விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்படவில்லை. இன்னும் 4 நாள்கள் காத்திருங்கள், நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த வணிகத்துக்கு அனுமதிக்கப்படும் என ஆட்சியா் கூறியுள்ளாா். அதை ஏற்றுக் கொண்டுள்ளோம்.

வரும் 12-ஆம் தேதி முதல் நேதாஜி மாா்க்கெட்டில் மொத்த காய்கறி விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் வேலூரில் காய்கறி மொத்த விற்பனை மொத்தமாக நிறுத்தப்படும். எப்போது மாவட்ட நிா்வாகம் நேதாஜி மாா்க்கெட்டில் காய்கறி மொத்த விற்பனைக்கு அனுமதி வழங்குகிறதோ அப்போதுதான் காய்கறி மொத்த வணிகம் நடைபெறும்.

தொடா்ந்து 3 நாள்கள் மாவட்ட நிா்வாகம் எந்த முடிவையும் தெரிவிக்காவிடில் அனைத்து வணிகா்களும் இணைந்து 16-ஆம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com