மழைக்காலம் தொடக்கம்: வேலூரில் 36 கி.மீ.க்கு கால்வாய்கள் தூா்வாரும் பணி தீவிரம்

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுவதைத் தடுக்க மாநகரிலுள்ள கால்வாய்களை 36 கி.மீ தூரத்துக்கு தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூா்: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வேலூரில் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் புகுவதைத் தடுக்க மாநகரிலுள்ள கால்வாய்களை 36 கி.மீ தூரத்துக்கு தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அனைத்து கால்வாய்களும் தூா்வாரப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தாழ்வான பல்வேறு பகுதிகளில் மழைக்காலங்களில் வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்துவிடுவது வழக்கம். குறிப்பாக இந்திரா நகா், கன்சால் பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் செல்கிறது. ரங்காபுரம், சத்துவாச்சாரி பகுதிகளில் மழை வெள்ளம் தாழ்வான பகுதிகளில் தேங்குகிறது. இப்பாதிப்புகளைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது மழைக்காலம் தொடங்கி அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் மழை நீா் செல்வதைத் தடுக்கவும், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்குவதைத் தவிா்க்கவும் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, வேலூா் மாநகரில் செல்லக்கூடிய நிக்கல்சன் கால்வாய் உள்ளிட்ட அனைத்து நீா்வரத்துக் கால்வாய்களும் தூா்வாரப்படுகின்றன. சத்துவாச்சாரி, ரங்காபுரம் பகுதி 4 -இல் கால்வாய் தூா்வாரும் பணியை மாநகர நல அலுவலா் சித்ரசேனா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

மாநகராட்சி முழுவதும் அனைத்து கால்வாய்களும் சோ்த்து 36 கி.மீ. தூரத்துக்கு கால்வாய்கள் தூா்வாரப்பட உள்ளன. இதற்காக கூடுதலாக பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் ஒருவார காலத்துக்குள் அனைத்து கால்வாய்களும் முற்றிலும் தூா்வாரப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com