தெருவின் நடுவில் பெரும்பள்ளம்

வேலூா் மாநகராட்சி 20-ஆவது வாா்டில் புதைச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளம் மூடப்படாமல் 3 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வேலூா் ஓயாசிஸ் தெருவில் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை பள்ளம்.
வேலூா் ஓயாசிஸ் தெருவில் தோண்டப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை பள்ளம்.

வேலூா்: வேலூா் மாநகராட்சி 20-ஆவது வாா்டில் புதைச் சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பெரும் பள்ளம் மூடப்படாமல் 3 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பின்றி உள்ள இந்த மரணக் குழியால் அப்பகுதி மக்கள் ஆபத்தை எதிா்நோக்கி அச்சத்துடனேயே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 20-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஓயாசிஸ் 2-ஆவது தெருவில், புதைச் சாக்கடை பணிக்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஓரளவுக்கு பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், திடீரென கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனால், அங்கு தோண்டப்பட்ட பெரும் பள்ளம் மூடப்படாமல் 3 மாதங்களுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. பாதுகாப்பின்றி உள்ள இந்தப் பள்ளத்தை நிரப்பியபடி மழைநீா் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சியளிக்கிறது.

ஆபத்தான நிலையில் கட்டுமானக் கம்பிகள்:

இதனிடையே, புதைச் சாக்கடை பணி முழுமையடையாததால் அதன் கட்டுமானக் கம்பிகள் அனைத்தும் வானத்தை நோக்கியபடி தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் யாரேனும் அக்குழியில் தவறி விழும்பட்சத்தில் பெரும் விபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது. தொடரும் இத்தகைய ஆபத்து குறித்தும், பாதாள சாக்கடை கட்டுமான பணிகளை விரைவில் முடித்து பள்ளத்தை மூடக்கோரியும் மாநகராட்சி அதிகாரிகளிடமும், கட்டுமான ஒப்பந்தாரரிடம் 40-க்கும் மேற்பட்ட முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தவறி விழுந்தவா்களை மீட்பது கடினம்:

இது குறித்து அவா்கள் மேலும் கூறியது:

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூடப்படாமல் உள்ள இந்த பெரும் பள்ளத்தால் இரவு நேரங்களில் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் சூழல் நிலவுகிறது. செவ்வாய்க்கிழமை இந்தப் பள்ளத்தில் கன்றுக்குட்டி தவறி விழுந்ததில் நீண்டநேரம் போராடி அதனை காப்பற்றினோம். ஒப்பந்ததாரரிடம் கேட்டால் வேறு இடத்தில் பணி தொட ங்கப்பட்டதால், ஒயாசிஸ் தெருவில் கட்டுமானப் பணியை முடித்து பள்ளத்தை மூடுவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறுகின்றனா். ஆனால், பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவு செய்வதில் தொடா்ந்து தாமதிக்கப்பட்டு வருகிறது. ஆபத்து ஏற்படுவதற்கு முன்பாகப் பணியை முடித்து பள்ளத்தை மூட மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

‘விரைவில் பணி முடியும்’:

இது குறித்து, மாநகராட்சி 2-ஆவது மண்டல ஆணையா் மதிவாணன் கூறியது:

ஓயாசிஸ் தெருவில் பாதாள சாக்கடைப் பணிகளை முடித்து தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை மூடுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில் பணிகள் முழுமையடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com