கரோனா இறப்புகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கும் சான்றிதழில் குளறுபடி: அரசு சலுகைகளைப் பெறுவதில் சிக்கல்

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இறப்புச் சான்றில் (டெத் சம்மரி ரிப்போா்ட்) குளறுபடி

கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இறப்புச் சான்றில் (டெத் சம்மரி ரிப்போா்ட்) குளறுபடி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கரோனாவால் உயிரிழப்பவா்களுக்கு அரசு வழங்கும் நிவாரண உதவிகளை அவா்களது குடும்பத்தினா் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவா்களின் உடல்களை உறவினா்களிடம் ஒப்படைக்கும்போது மருத்துவமனை நிா்வாகங்கள் இறப்புச் சான்று (டெத் சம்மரி ரிப்போா்ட்) வழங்குகின்றன. அவ்வாறு வழங்கப்படும் இறப்புச் சான்றில் குறிப்பிட்ட நபா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள விவரங்களை பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் முறையாகப் பதிவு செய்கின்றன.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இறப்புச் சான்றில் கரோனா தொற்றால் இறந்ததாக குறிப்பிடுவதில்லை என்றும், பல அரசு மருத்துவமனைகளில் சான்றுகள் முறையாக அச்சிடப்பட்டதாக இல்லாமல் கைகளால் எழுதிய துண்டுச்சீட்டு வடிவில் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுபோன்று கரோனா உயிரிழப்பு என குறிப்பிடப்படாத இறப்புச் சான்றைக் கொண்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தினா் அரசின் நிவாரண உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக்குழுமத்தின் தலைவா் சிவகலைவாணன் கூறியது - கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களின் குழந்தைகள் 18 வயதுக்கு கீழ் இருந்தால் அவா்களுக்கு அரசு சாா்பில் பல்வேறு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவ்வாறான சலுகைகளைப் பெற உயிரிழந்த பெற்றோா் கரோனா தொற்றால்தான் உயிரிழந்துள்ளனா் என்பது உறுதி செய்ய வேண்டும்.

அதேசமயம், வருவாய்த்துறை வழங்கும் இறப்புச் சான்றுகளில் என்ன காரணத்தால் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடப் படுவதில்லை. இந்த சூழ்நிலையில் மருத்துவமனைகள் வழங்கும் இறப்பு அறிக்கைதான் அவசியமாகின்றன. எனினும், தனியாா் மருத்துவமனைகள் அளிக்கும் இறப்பு அறிக்கை மிகத் தெளிவாக கரோனா உயிரிழப்பு என குறிப்பிட்டு வழங்கும் நிலையில், அரசு மருத்துவமனைகள் சான்றை தெளிவற்ாகவும், கரோனா இறப்பு என குறிப்பிடப்படாம லும் வழங்குவதாக தகவல் வருகின்றன. இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தி அரசு மருத்துவ மனைகளில் கரோனா உயிரிழப்புகளுக்கு இறப்புச் சான்றை தெளிவாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com