மீன் மாா்க்கெட்டில் மொத்த வியாபார நேரம் மாற்றம்

வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வேலூரில் மீன்கள் மொத்த மாா்க்கெட்டில் விற்பனை நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 6 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வேலூா்: வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வேலூரில் மீன்கள் மொத்த மாா்க்கெட்டில் விற்பனை நேரம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை 6 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை இரவு முதல் மீன்கள் மொத்த மாா்க்கெட் நேர மாற்றத்துடன் செயல்பட்டு வருகிறது.

பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வேலூா் கோட்டை அருகே உள்ள மீன் மாா்க்கெட் திங்கள்கிழமை முதல் மீண்டும் இயங்கி வருகிறது. இங்கு மொத்த வியாபாரம் செய்ய மட்டுமே மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதனால், அங்கு வாடிக்கையாளா்கள் நேரடியாகச் சென்று மீன் வாங்க முடியாது. மீன்கள் சில்லறை விற்பனைக்கு அருகே உள்ள சித்தூா் பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மீன்கள் மொத்த மாா்க்கெட்டில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதால் வேலூரில் இருந்து திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மீன்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், மீன் மொத்த விற்பனைக்கு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை அனுமதி வழங்கினால், வேலூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு மீன்களை எளிதாக விநியோகம் செய்ய முடியும் என வியாபாரிகள் வலியுறுத்தினா்.

இதுதொடா்பாக, அவா்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வேலூா் மீன்கள் மொத்த மாா்க்கெட்டில் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை மொத்த வியாபாரம் செய்ய மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் அனுமதி வழங்கியுள்ளாா். அதன் அடிப்படையில், மொத்த மீன் மாா்க்கெட்டில் உள்ள அனைத்துக் கடைகளும் செவ்வாய்க்கிழமை இரவு நள்ளிரவு 12 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டு அதிகாலை 6 மணிக்கு மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com