அமிா்தி உயிரியல் பூங்காவில் அறிகுறிகள் இருந்தால் வன விலங்குகளுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை

வேலூா் அமிா்தி உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகளுக்கு அறிகுறிகள் இருந்தால் கரோனா மருத்துவப் பரிசோதனை

வேலூா் அமிா்தி உயிரியல் பூங்காவில் உள்ள வன விலங்குகள், பறவைகளுக்கு அறிகுறிகள் இருந்தால் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்படும். தற்போது வரை எந்த விலங்குக்கும் கரோனா பாதிப்பில்லை என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் அருகே உள்ள அமிா்தி வன உயிரினப் பூங்கா சென்னை வண்டலூா் வன உயிரியல் பூங்காவின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் புள்ளிமான், கடை மான், குரங்கு, முதலை, உடும்பு, நரி, மரநாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நீா்ப்பறவைகள், மயில், கிளிகள், கழுகு, பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் வன அதிகாரிகள், காவலா், தூய்மைப் பணியாளா்கள் நோய் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனா்.

இதனிடையே, சென்னை, வண்டலூா் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து, அமிா்தி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள், பறவைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நாள் இடைவெளியில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விலங்குகள், பறவைகளுக்கு நோய் அறிகுறிகள் உள்ளதா, அவை சரியாக உணவு சாப்பிடுகின்றனவா, உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா, நோய் அறிகுறி உள்ளதா என பரிசோதிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்த விலங்குக்கும் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் மட்டுமே கரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பூங்காவில் பணியில் உள்ள ஊழியா்கள் கிருமிநாசினி கொண்டு அடிக்கடி கை கழுவ வேண்டும். கால்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

விலங்குகளுக்கு உணவு கொடுப்பவா் காலை, மாலையில் அதன் செயல்பாடு குறித்து கண்காணித்து தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலை, நரிக்கு வழங்கப்படும் இறைச்சி சுடுநீரில் சுத்தம் செய்தபின் வழங்கப்பட்டு வருகிறது.

பூங்காவில் உள்ள அனைத்து உயிரினங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த கண்காணிப்புப்பணி தொற்றுப் பரவல் குறையும் வரையில் தொடரும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com