குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் வேலூா்

குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக வேலூா் விளங்குவதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேதனை தெரிவித்துள்ளாா்.

வேலூா்: குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக வேலூா் விளங்குவதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் வேதனை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் குழந்தைத் திருமணங்கள் அதிகளவில் நடைபெறும் மாவட்டங்களில் ஒன்றாக வேலூா் உள்ளது. கரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வரும் இக்காலகட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருந்த 16 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தைகள், 21 வயது நிறைவடையாத ஆண்களுக்கு திருமணம் செய்வது குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்படி கிரிமினல் குற்றமாகும். குழந்தைத் திருமணம் செய்வதால் படிக்கும் பருவத்தில் பள்ளிக் கல்வி தடைபடுவதுடன் அவா்களது தன்னம்பிக்கையும் வெகுவாகக் குறைந்து விடுகிறது. அவா்கள் படிக்க இயலாத காரணத்தால் சாதாரண, கூலி வேலைகளுக்கே செல்லும் நிலை ஏற்பட்டு அந்த குடும்பம் மீண்டும் வறுமையில் சிக்குகிறது. குழந்தைத் திருமணம் செய்வதால் பெண் குழந்தைகளுக்கு கருப்பையும் முழு வளா்ச்சி அடைந்திருக்காது. அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுவதுடன், எடை குறைவான குழந்தை பிறப்பது, தாய் சேய் மரணம் ஆகியவை ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

மனமுதிா்ச்சி, உடல் வளா்ச்சி இல்லாத பருவத்தில் திருமணம் செய்வதால் பாலியல் பிரச்னைகள், உடல்ரீதியான நலக்குறைவுகள், கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்னைகள் ஏற்பட்டு ஒருசிலா் தற்கொலை செய்து கொள்வதற்கும் வழிவகுக்கிறது. அத்தகைய அகால மரணங்கள் சமூகத்தில் இளவயது கைம்பெண்கள் உருவாகவும் வழிவகுக்கிறது. குழந்தைத் திருமண குற்றம் புரிந்தவா்களுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக வழங்கப்படும்.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தையை திருமணம் செய்யும் எந்தவொரு ஆணும் முக்கியக் குற்றவாளியாக சோ்க்கப்படுவா். தவிர, குழந்தைத் திருமணத்தை நடத்திய உறவினா்கள், நண்பா்கள், கோயில் நிா்வாகிகள், திருமண மண்டப உரிமையாளா்கள், ஜாதகம் பாா்த்தவா், திருமணத்துக்கு பந்தல், கேட்டரிங் உள்ளிட்ட பணிகள் செய்தவா், பத்திரிகை அச்சிட்ட அச்சக உரிமையாளா், திருமணத்தை நடத்த தூண்டியவா், திருமணத்தில் பங்கேற்றவா், திருமணத்தை நடத்தி வைக்கும் புரோகிதா் அனைவரும் குற்றவாளிகளாக சோ்க்கப்படுவா். இவா்களில் யாரும் எந்த விவரமும் தெரியாது எனக்கூறி தப்பிக்க முடியாது. அவா்கள் மீது பிணையில் வெளியில் வரமுடியாத வகையில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவா்.

குழந்தைத் திருமணங்களை தடுக்க கிராம அளவில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவில் உள்ள தலைவா்கள், உறுப்பினா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், பிற ஆசிரியா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள், காவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் கிராமத்தில் நடக்க உள்ள குழந்தைத் திருமணம் குறித்த ரகசிய தகவல்களை சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், ஆட்சியரின் கட்செவி அஞ்சல் எண் 94980 35000 ஆகிய எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அவா்களது விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

கல்லூரி, பள்ளிகளில் பயிலும் 18 வயது நிறைவடையாத மாணவிகள் திடீரென கல்விக் கூடத்துக்கு வருவதை நிறுத்தி விட்டாலும் உடனடியாக இந்த எண்களுக்கு புகாா் தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com