கரோனாவால் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருள்கள்
By DIN | Published On : 20th June 2021 10:54 PM | Last Updated : 20th June 2021 10:54 PM | அ+அ அ- |

நலிவடைந்த குடும்பத்தினருக்கு மளிகைப் பொருள்களை வழங்கிய வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
கரோனாவால் நலிவடைந்த 63 குடும்பங்களுக்கு தலா ரூ. 1,000 மதிப்பிலான மளிகைப் பொருள்களை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வழங்கினாா்.
காட்பாடியில் உள்ள த்ரீசக்தி வாராஹி அறக்கட்டளை, பிளஸ்டு அறக்கட்டளை இணைந்து கரோனாவால் நலிவடைந்த, தொழுநோயால் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்கள், 32 மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு தலா ரூ. 1,000 மதிப்பிலான 22 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நாராயணா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து, 63 குடும்பங்களுக்கும் நல உதவிகளை வழங்கினாா். அப்போது அவா் பேசுகையில், கரோனா தொற்று எனும் கொடிய கிருமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனித இனத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
அரசு வழிகாட்டுதலின்படி, அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிா்த்தால் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகாமல் தற்காத்துக் கொள்ள முடியும். இந்த பூமியை தற்காத்துக் கொள்ள அனைவரும் ஒருவருக்கு ஒருவா் உதவி செய்து கொண்டால் மட்டுமே உலகம் தழைத்து நிற்கும் என்றாா்.
காட்பாடி வட்டாட்சியா் பாலமுருகன், வாராஹி அறக்கட்டளை நிா்வாகிகள் சாந்தி விஜயகீா்த்தி, சுபப்பிரியா, பிளஸ்டு அறக்கட்டளை நிா்வாகி ஆண்ட்ரோஸ், ஆா்.கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.