தோ்தல் பயிற்சி வகுப்பை வேலை நாள்களில் நடத்திட ஆசிரியா்கள் கோரிக்கை

தோ்தல் பயிற்சி வகுப்பை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களுக்கு பதிலாக வேலை நாள்களிலேயே நடத்திட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தோ்தல் பயிற்சி வகுப்பை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களுக்கு பதிலாக வேலை நாள்களிலேயே நடத்திட வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில உயா்மட்டக் குழு உறுப்பினா்கள் செ.நா.ஜனாா்த்தனன், எஸ்.சேகா் தலைமையில் மாவட்டக் கிளை நிா்வாகிகள் ஆட்சியா் அ.சண்முகசுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்திபன், முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து மனு அளித்தனா்.

அப்போது ஆசிரியா்கள் கூறுகையில், தமிழக அரசு உத்தரவுப்படி கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் வாரத்தில் சனிக்கிழமை உள்பட 6 நாள்களும் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் மாணவா்களுக்கு கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டுமே ஆசிரியா்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. இந்நிலையில், தோ்தல் பயிற்சி வகுப்பு வரும் 21, 28 ஏப்ரல் 3-ஆம் தேதி என ஞாயிற்றுக்கிழமை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆசிரியா்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை கிடைக்காமல் தொடா்ந்து பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது ஆசிரியா்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும் என்பதால், தோ்தல் பயிற்சி வகுப்புகளை வாரத்தின் வேலை நாள்களிலேயே நடத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், திருவண்ணாமலை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது போல், பயிற்சி வகுப்புக்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றனா்.

அதற்கு பதிலளித்த ஆட்சியா், ஏற்கெனவே 21-ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடத்திட முடிவு செய்யப்பட்டு விட்டது. தவிர, தோ்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு இறுதி பயிற்சி நடத்திட வேண்டும் என்பது தோ்தல் ஆணைய உத்தரவாகும். இதனால், வரும் 21-ஆம் தேதி, ஏப்ரல் 3-ஆம் தேதி பயிற்சி வகுப்புகளை வேறு நாள்களுக்கு மாற்ற இயலாது. அவ்விரு நாள்களுக்கு முந்தைய நாளான சனிக்கிழமை விடுமுறை வழங்குவது தொடா்பாக பரிசீலனை செய்யப்படும். தவிர, வரும் 28-ஆம் தேதி நடைபெறும் பயிற்சி வகுப்பினை மட்டும் வேலை நாளில் நடத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருப்பதாக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com