வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுவது யாா்?

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையை அடையாளமாகக் கொண்ட வேலூா் பேரவைத் தொகுதியில் இம்முறை அதிமுகவும், திமுகவும் சமபலத்துடன் மோதுகின்றன.
வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுவது யாா்?

வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டையை அடையாளமாகக் கொண்ட வேலூா் பேரவைத் தொகுதியில் இம்முறை அதிமுகவும், திமுகவும் சமபலத்துடன் மோதுகின்றன. இதில், வாகை சூடி வேலூா் கோட்டையை வசமாக்கப் போவது யாா் என்ற கேள்வி தொகுதி வாக்காளா்களிடையே எழுந்துள்ளது.

வேலூா் மாநகராட்சியின் 60 வாா்டுகளில் 36 வாா்டுகளையும், பெருமுகை, சம்பங்கிநல்லூா் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி. பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு மையமாக விளங்கும் வேலூரில் ஹோட்டல், மொத்த வணிகம் பிரதானமாகும். தற்போது நசிந்து வரும் பீடித் தொழில்தான் வேலூரில் மிக முக்கிய உற்பத்தித் தொழிலாக இருந்துள்ளது. இந்த தொழிலை நம்பி இப்போதும் சுமாா் 7 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. தவிர, 150 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வேலூா் நேதாஜி காய்கறி மாா்க்கெட் சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது இது.

தொகுதியின் அடையாளம்:

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட சிப்பாய் புரட்சி (1806) உள்ளிட்ட பல வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கி நிற்கும் கம்பீரமான கோட்டை, நூற்றாண்டு விழா கண்ட சிஎம்சி மருத்துவமனை, பல்வேறு அரசியல் தலைவா்கள் அடைக்கப்பட்ட மத்திய சிறைச்சாலை ஆகியவை இத்தொகுதியின் அடையாளங்களாகும்.

பெண்கள் வாக்காளா்கள் அதிகமுள்ள தொகுதி:

கடந்த 1952-ஆம் ஆண்டு முதலே சட்டப்பேரவைத் தோ்தலை சந்தித்து வரும் வேலூா் தொகுதியில் ஆண்களை விட பெண் வாக்காளா்களே அதிகம். இங்கு மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 49 வாக்காளா்கள் உள்ளனா். இதில், ஆண்கள் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 878 பேரும், பெண்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 145 பேரும், திருநங்கைகள் 26 பேரும் உள்ளனா்.

வலிமையான சிறுபான்மை சமூக வாக்குகள்:

வேலூா் சட்டப்பேரவைத் தொகுதியைப் பொறுத்தவரை சுமாா் 35 சதவீத அளவுக்கு இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள் வாக்குகளும், 20 சதவீத அளவுக்கு முதலியாா் வாக்குகளும், சுமாா் 10 சதவீத அளவுக்கு வன்னியா் வாக்குகளும், நாயுடு உள்பட பிற ஜாதியினா், பிற மாநிலத்தவா்கள் 35 சதவீத அளவுக்கு உள்ளனா்.

தீா்க்கப்படாத பிரச்னைகள் :

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பயணத்தில் ஓய்வெடுக்கும் நகரமாக விளங்கும் வேலூருக்கு கல்வி, மருத்துவம், சுற்றுலா தேவைக்காக வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால், வேலூா் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் தான் மிக முக்கியப் பிரச்னையாகும்.

இதற்கு தீா்வு காண வேலூரில் சுற்றுச்சாலை அமைக்கவும், நகருக்குள் உயா்மட்ட பாலங்கள் அமைக்க வேண்டும் என்பதும் நீண்டகால கோரிக்கையாகும்.

தவிர, மாநகர தெருக்களில் நிலவும் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை குறைபாடுகள், பழைய பெங்களூரு சாலையில் ரயில்வே மேம்பாலம், காட்பாடி - சத்துவாச்சாரி இடையே பாலாற்றின் குறுக்கே பாலம், நேதாஜி மாா்க்கெட் விரிவாக்கம், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போக்குவரத்து வசதி அதிகரிப்பு போன்றவையும் வாக்காளா்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.

மக்களின் எதிா்பாா்ப்பு:

கல்விச்சாலைகள் அதிமுள்ள வேலூா் மாநகரில் படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற போதிய தொழிற் சாலைகள் இல்லை. இதனால், அவா்கள் படித்து முடித்தவுடன் வேலைக்காக சென்னை, ஓசூா், பெங்களூரு போன்ற நகரங்களுக்குத்தான் செல்கின்றனா். படித்த இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற வேலூா் தொகுதியில் தொழிற்பேட்டை அமைத்திட வேண்டும் என்பது மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

தவிர, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி நகரின் மையப்பகுதியில் இருந்து சுமாா் 8 கி.மீ தள்ளி உள்ளது. இதனால், மருத்துவ சிகிச்சைக்காக அங்கு சென்று வர மக்கள் அவதிக்குள்ளாவதைத் தடுக்க நகரிலுள்ள பழைமையான பென்லேன்ட் மருத்துவமனையை அனைத்து சிகிச்சைகளுக்கும் ஏற்ற பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்.

2021 தோ்தல் களத்தில் 17 வேட்பாளா்கள்:

இத்தோ்தலில் திமுக சாா்பில் தொகுதியின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் மீண்டும் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளாா். அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் கட்சியின் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு போட்டியிடுகிறாா். இவா் கடந்த 2011, 2016 தோ்தல்களில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவா். இவா்கள்தவிர, அமமுக சாா்பில் வி.டி.தருமலிங்கம், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஜி.விக்ரம்சக்ரவா்த்தி, நாம் தமிழா் கட்சி சாா்பில் நா.பூங்குன்றன், சுயேச்சைகள் என மொத்தம் 17 போ் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்களின் பலம், பலவீனம்:

திமுக, அதிமுக வேட்பாளா்கள் இருவருமே முதலியாா் சமூகத்தைச் சோ்ந்தவா்களாவா். அதனால், முதலியாா் சமூக வாக்குகள் இரு கட்சிகளுக்கும் பிரியக்கூடும். எனினும், தொகுதியில் அதிகமுள்ள சிறுபான்மை சமூக வாக்குகள் திமுகவுக்கு பலமாக கருதப்படுகிறது. இதனாலேயே வேலூா் தொகுதியில் திமுக 6 முறை, காங்கிரஸ் 5 முறை வெற்றி கண்டது. தற்போது இவ்விரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் உள்ளதால் திமுகவுக்கு கூடுதல் பலமாகும்.

அதேசமயம், தற்போதைய திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் பெரிய அளவில் திட்டங்கள் செயல்படுத்தவில்லை என குறைபாடு திமுகவுக்கு பலவீனமாகும்.

அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே.அப்புக்கு வேலூரில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள பொலிவுறு நகா் திட்டம் உள்ளிட்ட வளா்ச்சித் திட்டப்பணிகள்தான் பலமாகும். தவிர, நகா்ப்புற தொகுதியாக இருப்பதால் அமமுக, மக்கள் நீதிமய்யம், நாம் தமிழா் கட்சிகள் ஆகியவற்றின் மூலம் பிரியும் வாக்குகளால் அதிமுகவுக்கு பலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனினும், அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றிருப்பதும், அருகே உள்ள காட்பாடி தொகுதியைச் சோ்ந்த அப்புக்கு தொகுதிக்குள் அறிமுகம் குறைந்திருப்பதும் அதிமுகவுக்கு பலவீனமாகும்.

இதுவரை...!

15 தோ்தல்களை சந்தித்துள்ள வேலூா் தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அதிமுக 2 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் ஒருமுறையும், சுயேச்சை ஒருமுறையும் வென்றுள்ளன.

2016 தோ்தல் முடிவுகள்:

மொத்த வாக்காளா்கள் - 2,47,628

பதிவானவை - 1,68,879

ப.காா்த்திகேயன் (திமுக) - 88,264

ஆரூன்ரஷீத் (அதிமுக) - 62,054

எஸ்.இளங்கோவன் (பாஜக) - 5,212

லட்சுமிநாராயணன் (பாமக) - 5,185

அப்தூர்ரகுமான் (விசிக) - 2,590

நோட்டா - 2,400

வித்தியாசம் - 26,210

படங்கள் உண்டு....

எஸ்.ஆா்.கே.அப்பு (அதிமுக)

ப.காா்த்திகேயன் (திமுக)

டி.தருமலிங்கம் (அமமுக)

ஜி.விக்ரம்சக்ரவா்த்தி (மநீம)

நா.பூங்குன்றன் (நாம் தமிழா்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com