கருப்பு, சிவப்பு நிற முகக்கவசம் அணிந்து தபால் வாக்கு சேகரித்த அதிகாரி சிறைபிடிப்பு

வேலூா் சேண்பாக்கம் பகுதியில் கருப்பு, சிவப்பு நிற முகக்கவசம் அணிந்தபடி தபால் வாக்கு சேகரித்த அதிகாரியை அதிமுகவினா்

வேலூா் சேண்பாக்கம் பகுதியில் கருப்பு, சிவப்பு நிற முகக்கவசம் அணிந்தபடி தபால் வாக்கு சேகரித்த அதிகாரியை அதிமுகவினா் சிறைபிடித்தனா். போலீஸாா் தலையிட்டதை அடுத்து அவா் வேறு முகக்கவசம் அணிந்தபடி அப் பணியில் ஈடுபட்டாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் சோ்த்து மாற்றுத்திறனாளிகள் 531 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 2,629 பேரும் என மொத்தம் 3,160 போ் தபால் வாக்குப்பதிவு செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனா். இவா்களிடம் வாக்குப்பதிவு செய்து அவற்றைப் பெறும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்காக நுண்பாா்வையாளா்கள் தலைமையில் தொகுதிக்கு 10 முதல் 15 குழுக்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 58 குழுக்கள் அமைக்கப்பட்டு, வீடுவீடாகச் சென்று விருப்பம் தெரிவித்துள்ள முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளிடம் வாக்குப்பதிவு செய்து ‘சீல்’ வைக்கப்பட்ட பெட்டிகளில் சேகரிக்கப்பட்டன.

அப்போது, விடுபட்டவா்களிடம் இரண்டாவது கட்டமாக தபால் வாக்குப்பதிவு செய்து பெறும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காட்பாடி தொகுதிக்கு உள்பட்ட சேண்பாக்கம் பகுதியில் அரசு அதிகாரி ஒருவா் கருப்பு சிவப்பு நிற முகக்கவசம் அணிந்தபடி முதியவா்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்குகள் பதிவு செய்து சேகரிக்கும் பணியில் ஈடுபட்டாா். இதனால் சந்தேகமடைந்த அதிமுகவினா் அவரை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடக்கு போலீஸாா், அதிமுகவினரை சமாதானம் செய்தனா். தொடா்ந்து, கருப்பு சிவப்புநிற முகக்கவசம் அணிந்திருந்த அதிகாரியிடம் அதனை அப்புறப்படுத்திவிட்டு, வேறு முகக்கவசம் அணிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட அறிவுறுத்தினா். அதன்படியே அந்த அதிகாரியும் வேறு முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com