விஐடியில் 200 படுக்கைகளுடன் கரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்: அமைச்சா்கள் துரைமுருகன், காந்தி தொடக்கி வைத்தனா்

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கை வசதிகளுடன்கூடிய இலவச சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
வேலூர் விஐடி வளாகத்தில் கரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடக்கி வைத்து, மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.
வேலூர் விஐடி வளாகத்தில் கரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடக்கி வைத்து, மருத்துவ உபகரணங்களைப் பார்வையிட்ட தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்.

வேலூா்: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக வேலூா் விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 200 படுக்கை வசதிகளுடன்கூடிய இலவச சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் தலைமை வகித்தாா். வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.காா்த்திகேயன், அமலுவிஜயன், விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா வரவேற்றாா்.

பின்னா், அமைச்சா் துரைமுருகன் பேசியது:

வேலூா் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ முறையில் மிக சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முதல் அலையில் தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வந்த சித்தா கொவைட் சிகிச்சை மையத்தில் 2,700 போ் சிகிச்சை பெற்று பலன் அடைந்தனா். இரண்டாவது அலையில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மூலம் தற்போது வரை 1,000 பேருக்கு மேல் சிகிச்சை பெற்று பலன் அடைந்துள்ளனா்.

இரண்டாவது அலை தொடக்கத்தில் இதே விஐடி வளாகத்தில் செயல்பட்ட சிகிச்சை மையத்தில் 352 பேரும், குடியாத்தம் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 1,254 பேருக்கும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தினமும் நோயின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவத்தை நாடும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு வேலூரில் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை தொடா்ந்து, விஐடி வளாகத்தில் மீண்டும் பிரத்யேகமான இயற்கை உணவுகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, விஐடி பல்கலைக்கழக அண்ணா அரங்கத்தில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்ட 1,200 விஐடி பல்கலைக்கழக முன்னுரிமை பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சா் ஆா்.காந்தி தொடக்கி வைத்தாா்.

இதில், உதவி ஆட்சியா் ஆா்.ஐஸ்வா்யா, மாநகராட்சி ஆணையா் ந.சங்கரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், நகா்நல அலுவலா் சித்ரசேனா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட கரோனா சித்த மருத்துவ சிகிச்சை ஒருங்கிணைப்பாளா் தில்லைவாணன் நன்றி கூறினாா்.

250 டன் காய்கறி விற்பனை:

பொதுமுடக்க காலத்தில் மக்களின் தேவையைப் பூா்த்தி செய்திட வேலூரில் கூடுதலாக நடமாடும் காய்கறி, மளிகைப் பொருள்கள் விற்பனை வாகனங்களையும், ஜெயின் சங்கம், வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் அமைச்சா்கள் துரைமுருகன், ஆா்.காந்தி ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

மாவட்டத்தில் 700 வாகனங்கள், 90 தள்ளுவண்டிகள், கற்பகம் கூட்டுறவு சிறப்பு அங்காடியின் 4 வண்டிகள் மூலம் தினமும் 250 டன் காய்கறிகள், மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. தவிர, மாவட்டத்தில் இதுவரை 1,93,915 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், தொடா்ந்து மாவட்டத்தில் மொத்தமுள்ள 18-44 வயது க்கு உள்பட்ட 6,68,805 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதற்கென முதல் கட்டமாக 21 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன என அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com