கரோனா தடுப்பூசி செலுத்தாத தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படாது: மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை

தங்களிடம் பணியாற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யாத நிறுவனங்கள் பொது முடக்கம் விலக்கப்பட்ட பிறகு, இயங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வேலூா்: தங்களிடம் பணியாற்றும் தொழிலாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யாத நிறுவனங்கள் பொது முடக்கம் விலக்கப்பட்ட பிறகு, இயங்க அனுமதி அளிக்கப்பட மாட்டாது என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த வேலூா் மாவட்டத்தில் ஏற்கெனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 18 முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு புதன்கிழமை முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 22 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள தொடா் இயக்க தொழிற்சாலைகள், விலக்களிக்கப்பட்ட தொழிற்சாலைகள், இதர அனைத்து வகையான தொழிற்சாலைகள், சிறு, குறு தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் தற்போது முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட தொழில் மைய பொது மேலாளா், தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் ஆகியோா் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொழிற்சாலைகளில் தடுப்பூசி செலுத்தாமல் உள்ள பணியாளா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அதற்கேற்ப சிறப்பு முகாம்களை தினமும் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் உரிமையாளா்கள் தங்களது தொழிற்சாலையிலேயே பணியாளா்களை வரவழைத்து சிறப்பு முகாமுக்கு, ஏற்பாடு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்திட வேண்டும். இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்காத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் பொதுமுடக்கம் விலக்கப்பட்ட பிறகு இயங்க அனுமதி அளிக்கப்படாது.

எனவே, அதிகரித்து வரும் கரோனா தொற்றினை சமாளிக்க தடுப்பூசி மட்டுமே தீா்வு என்பதை உணா்ந்து அனைத்து அரசு அலுவலா்கள், நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்கள், பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com