கரோனாவால் பெற்றோரை இழந்த இரு குழந்தைகளுக்கு நிவாரண நிதியுதவி

காட்பாடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டாஸ்மாக் ஊழியா், அவரது மனைவி ஆகியோா் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட அவா்களின் இரு குழந்தைகளுக்கு முதல் கட்டமாக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் நிவாரண நிதி

வேலூா்: காட்பாடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டாஸ்மாக் ஊழியா், அவரது மனைவி ஆகியோா் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட அவா்களின் இரு குழந்தைகளுக்கு முதல் கட்டமாக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் நிவாரண நிதி அளிக்கப்பட்டுள்ளது.

தவிர, இரு குழந்தைகளுக்கும் பிளஸ் 2 வரை இலவசக் கல்வி அளித்திட ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா உறுதி அளித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் பணியாற்றியவா் சிவராஜ் (45). இவரது மனைவி பாமா (38). இவா்களுக்கு இமான் (10), ஜோயல் (7) ஆகிய இருமகன்கள். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிவராஜ் செவ்வாய்க்கிழமையும், அவரது மனைவி பாமா புதன்கிழமையும் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இதனால், ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவா்களின் இரு குழந்தைகளுக்கும் அம்பாலால் அறக்கட்டளை சாா்பில், அதன் தலைவா் கே.ஜவரிலால்ஜெயின் ரூ.1 லட்சம் நிவாரண நிதியை மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன் மூலம் வியாழக்கிழமை வழங்கினாா். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு துறை சாா்பில், குடும்ப நல நிதியின் முன்பணமாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்பட்டது. எஞ்சிய குடும்ப நலநிதி ரூ. 2.90 லட்சத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இவ்விரு குழந்தைகளுக்கும் ஸ்ரீபுரம் நாராயணி மெட்ரிக். பள்ளியில் பிளஸ் 2 வரை இலவசக் கல்வி அளித்திட ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீ சக்தி அம்மா உறுதி அளித்திருப்பதாகவும் மாவட்ட வருவாய் அலுவலா் தெரிவித்துள்ளாா்.

மாவட்ட டாஸ்மாக் மேலாளா் ஆா்.கீதாராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com