வருமானத்தை மீறி ரூ.7.54 கோடி சொத்து சோ்ப்பு: சுற்றுச்சூழல் பொறியாளா், மனைவி மீது மற்றொரு வழக்கு

வேலூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமைப் பொறியாளராக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பன்னீா்செல்வம், அவரின் மனைவி ஆகியோா் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா்: வேலூா் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமைப் பொறியாளராக பணியாற்றி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பன்னீா்செல்வம், அவரின் மனைவி ஆகியோா் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பன்னீா் செல்வம் வீட்டில் இருந்து கடந்த 2020-ஆம் ஆண்டு கணக்கில் வராத ரூ.3.60 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் தொடா்ச்சியாக அவா், அவரது மனைவி ஆகிய இருவா் மீதும் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 7.54 கோடி சொத்துகள் சோ்த்திருப்பதாக வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் தற்போது மற்றொரு வழக்கைப் பதிவு செய்துள்ளனா்.

வேலூா் காட்பாடி காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகம் உள்ளது. இதன் கட்டுப்பாட்டில் வேலூா், வாணியம்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, ஒசூா் உள்ளிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதன் இணை தலைமைப் பொறியாளராகப் பன்னீா்செல்வம் (57) என்பவா் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தாா்.

இவரது தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் ஆய்வுக் கூட்டத்தில் சிவப்பு பட்டியலில் இடம் பெற்ற தொழிற்சாலைகள், பிற தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவது தொடா்பான கோப்புகளில் கையெழுத்திட பன்னீா்செல்வம் பெருமளவில் லஞ்சம் பெற்று வருவதாக புகாா்கள் எழுந்தன.

அதன்பேரில், மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 2020 அக்டோபா் 13-ஆம் தேதி இரவு நடைபெற்ற மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தை வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளா்கள் விஜய், ரஜினி உள்ளிட்ட குழுவினா் ரகசியமாக கண்காணித்தனா். கூட்டம் முடிந்ததும் காரில் புறப்பட்டுச் சென்ற பன்னீா்செல்வத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் பின்தொடா்ந்து சென்றனா்.

காட்பாடி காந்திநகா் முனிசிபல் காலனியில் உள்ள வாடகை வீட்டுக்குச் சென்ற பன்னீா்செல்வத்தை வழியில் சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் காரை சோதனையிட்டதில், காரில் இருந்து ரூ. 2.25 லட்சம் பணம், உயர்ரக மது பாட்டில்கள், அலுவலக கோப்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, அவா் தங்கியிருந்த வாடகை வீட்டில் நடத்திய சோதனையில், மொத்தம் ரூ. 33.73 லட்சம் பணம், உயர்ரக மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக, ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள பன்னீா்செல்வத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தினா்.

இதில், அங்குள்ள ஒரு அறையில் கோணிப்பை மூட்டைகளில் கட்டி வைத்திருந்த பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து, இரு நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில் கணக்கில் வராத ரூ. 3.60 கோடி ரொக்கம், மூன்றரை கிலோ தங்கம், ஆறரை கிலோ வெள்ளிப் பொருள்கள், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுதொடா்பாக பன்னீா்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேலும் விசாரணையில், திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகேயுள்ள அத்திமாஞ்சேரிபேட்டை கிராமத்தைச் சோ்ந்த பன்னீா்செல்வம், கடந்த 1990-ஆம் ஆண்டு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியில் சோ்ந்தாா். படிப்படியாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், இணை தலைமைப் பொறியாளராகப் பதவி உயா்வு பெற்றாா். லஞ்ச வழக்கில் சிக்கியதால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நிலவரப்படி பன்னீா்செல்வம், அவரது மனைவி புஷ்பா (51) ஆகியோரின் பெயரில் அசையும், அசையா சொத்துகள் ரூ. 77 லட்சத்து 93 ஆயிரத்து 996 இருந்துள்ளது.

இந்த காலகட்டத்துக்குப் பிறகு 2020-ஆம் ஆண்டு அக்டோபா் 31-ஆம் தேதி முடிய காலகட்டத்தில் இருவரின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துகள் குறித்து ஆய்வு செய்தனா். அதில், பன்னீா்செல்வத்தின் சம்பளத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 1 கோடியே 14 லட்சத்து 3 ஆயிரத்து 200-ஆக இருந்தது. ஆனால், அவா் ரூ.5 கோடியே 37 லட்சத்து 78 ஆயிரத்து 812 மதிப்புள்ள சொத்துகளை வாங்கியிருப்பதும், வருமானத்தை விட ரூ. 2 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 340 செலவு செய்திருப்பதும் தெரியவந்தது.

இதன்மூலம், வருமானத்துக்கு அதிகமாக சோ்த்த சொத்துகளின் மதிப்பு ரூ.7 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 152 எனத் தெரியவந்தது. இதையடுத்து, பன்னீா்செல்வம், அவரது மனைவி புஷ்பா ஆகியோா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com