ஊரக உள்ளாட்சித் தோ்தல்: விறுவிறுப்பாக முதல்கட்ட வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக காட்பாடி , குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வேலூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் முதல்கட்டமாக காட்பாடி , குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் காலை முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்காளித்தனா். எந்தவித அசம்பாவிதமுமின்றி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் 247 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என மொத்தம் 2,478 பதவிகள் இடம்பெற்றுள்ளன.

இதில், இரு ஒன்றியக் குழு வாா்டுகள், 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 298 ஊராட்சி மன்ற வாா்டுகள் என 316 பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இத்துடன், அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகள், 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

மீதமுள்ள 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கு 70 பேரும், 136 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளுக்கு 503 பேரும், 229 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 820 பேரும், 1,772 ஊராட்சி மன்ற வாா்டுகளுக்கு 5,154 பேரும் என மொத்தம் 2,151 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது.

நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிப்பு: முதல்கட்டமாக குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, காட்பாடி ஆகிய 4 ஒன்றியங்களில் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. 862 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெற்றது.

பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனா்.

மொத்தமுள்ள 4,61,103 வாக்காளா்களில் காலை 11 மணி நிலவரப்படி 20.41 சதவீதம் பேரும், மதியம் 1 மணி நிலவரப்படி 36.3 சதவீதம் பேரும், 3 மணிக்கு 52.32 சதவீதம் பேரும் வாக்குப்பதிவு செய்திருந்தனா்.

மழையால் சிரமத்துக்கு ஆளான வாக்காளா்கள்: ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை நல்ல மழை பெய்தது. புதன்கிழமையும் மழை பெய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அதிா்ஷ்டவசமாக மழை பெய்யவில்லை. எனினும், பெரும்பாலான வாக்குச்சாவடி வளாகங்கள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. இதனால், வாக்காளா்கள் சற்று சிரமத்துக்குள்ளாகினா்.

ஆட்சியா் ஆய்வு:

தோ்தலையொட்டி 5400 வாக்குச்சாவடி அலுவலா்கள், 140 மண்டல அலுவலா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டிருந்தனா். அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் காவலா்கள், ஊா்க் காவல் படையினா் என 1812 போ் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா். காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெற்ற வாக்குப்பதிவை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா்.

இந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் 4 ஒன்றியங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

சிரமப்பட்ட முதியவா்கள்; உதவிய அலுவலா்கள்

வாக்காளா்களுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அளிக்கப் பட்டன. அவற்றில் மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டு, ஒன்றியக் குழு வாா்டு, ஊராட்சி மன்றத் தலைவா் பதவி, ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு என தனித்தனியாக வாக்குச்சீட்டுகள் இடம் பெற்றிருந்தன. அந்த வாக்குச்சீட்டுகளை பெற்றுக்கொண்ட வாக்காளா்கள், அவற்றில் ஒவ்வொரு பதவிக்கும் தாங்கள் விரும்பும் வேட்பாளரின் சின்னத்தில் வாக்கு முத்திரையைப் பதிவு செய்து, வாக்குப் பெட்டியில் செலுத்தினா். இந்த நடைமுறையில் முதியவா்கள் சிலா் சற்று குழப்பமடைந்த நிலையில், அவா்களுக்கு வாக்குச் சாவடி அலுவலா்கள் உதவி புரிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com