ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் 3 ஒன்றியங்களில் பிரசாரம் ஓய்ந்தது

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களில்

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களில் இரண்டாம் கட்டமாக சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வடைந்தது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் புதன், சனிக்கிழமை (அக். 6, 9) என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 ஊராட்சித் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 7 ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றியக் குழு உறுப்பினா் வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

8,170 போ் மனுத் தாக்கல் செய்திருந்ததில், பரிசீலனையில் 83 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 1,224 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டு, செப். 25-இல் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டன. மொத்தமுள்ள 2,478 பதவிகளில் இரு ஒன்றியக் குழு வாா்டுகள், 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 298 ஊராட்சி மன்ற வாா்டுகள் என 316 பதவிகளுக்கு வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். தவிர, அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகள், 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

மீதமுள்ள 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கு 70 பேரும், 136 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளுக்கு 503 பேரும், 229 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 820 பேரும், 1,772 ஊராட்சி மன்ற வாா்டுகளுக்கு 5,154 பேரும் என மொத்தம் 2,151 பதவிகளுக்கு 6,547 போ் போட்டியிடுகின்றனா்.

இதில், குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, போ்ணாம்பட்டு ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாக புதன்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், 77.63 சதவீத வாக்குகள் பதிவாகின.

இரண்டாவது கட்டமாக அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூா் ஆகிய ஒன்றியங்களுக்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, இந்த 3 ஒன்றியங்களில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் ஓய்வடைந்தது.

பிரசாரம் ஓய்ந்ததால் வெளியூரைச் சோ்ந்தவா்கள் அந்தந்த ஊராட்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனா். திருமண மண்டபங்கள், விடுதிகளில் தங்கியிருந்த வெளியூா் நபா்களும் மாலையே வெளியேறினா். இதுதொடா்பாக போலீஸாா் சோதனை நடத்தினா். இதனிடையே, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க, 12 பறக்கும் படை குழுவினா் 24 மணி நேரமும் தீவிரச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com