சாலைகளை சீரமைக்கக் கோரி வியாபாரிகள் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் சாலைகளை சீரமைக்கக் கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் சாலைகளை சீரமைக்கக் கோரி கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை விரைவில் சீரமைக்க வலியுறுத்தி, வியாபாரிகள் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பொலிவுறு நகா் திட்டத்தின்கீழ் வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் 16 அடி அகலத்திலும், 500 அடி நீளத்துக்கும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை அப்பணியை முடிக்காததால், சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. அவற்றில் கழிவுநீா் தேங்கி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இப்பகுதியில் பாத்திரம், துணிக்கடை உள்ளிட்ட மொத்த வியாபாரக் கடைகள் உள்ளன. தற்போது சாலை சீரமைக்கப்படாததால், கடைகளுக்கு வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இதேபோல், மெயின் பஜாா் பகுதியிலும் சாலைப் பணிகள் முடிக்கப்படவில்லை.

இதுதொடா்பாக ஏற்கெனவே மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் சாலைகள் சீரமைக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதைத் தொடா்ந்து, சாலையை சீரமைக்கும் பணிகளை விரைவுபடுத்தக்கோரி வியாழக்கிழமை கடைகளின் முன்பு கருப்புக்கொடி போராட்டமும், 9-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடவும் வியாபாரிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகும் பணிகள் முடிக்கப்படாவிடில் 12-ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்களுக்கு கடையடைப்பு போராட்டம் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், வேலூா் பிஎஸ்எஸ் கோயில் தெருவில் வியாபாரிகள் வியாழக்கிழமை கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு தலைமை வகித்தாா். இதில், நிா்வாகிகள் ரோஸ், பாபு அசோகன், வெங்கடேசன், அருண்பிரசாத், காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் பாலு, அடகு நகைக் கடை உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ரமேஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com