வேலூரில் 1,000 இடங்களில் மெகா கரோனா தடுப்பூசி முகாம்

வேலூா் மாவட்டத்தில் 5-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
வேலூா் ஓட்டேரியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
வேலூா் ஓட்டேரியில் நடந்த கரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

வேலூா் மாவட்டத்தில் 5-ஆம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை 1,000 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தமிழகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சுகாதாரத் துறை ஊழியா்கள் வீடுவீடாகவும், கடைகடையாகவும் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகின்றன. 5-ஆவது வாரமாக மெகா கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் 1,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடந்தன. இதில், மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 300 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முகாம்கள் மூலம் பொதுமக்கள் சுமாா் 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, பொதுமக்கள் ஆா்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை ஊக்கப்படுத்திட வேலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு பரிசுத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் தடுப்பூசி செலுத்திடும் பொதுமக்கள் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, முதல் பரிசாக ஒருவருக்கு வாஷிங் மெஷின், இரண்டாவது பரிசாக 5 பேருக்கு தங்க நாணயம், 3-ஆவது பரிசாக ஒருவருக்கு மிக்சி, 100 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கிட அறிவிக்கப்பட்டிருந்தது.

முதலாவது மண்டலமான காட்பாடியில் வாஷிங் மெஷின், செல்லிடப்பேசி, மிக்சி, ஆறுதல் பரிசுகள் வழங்கிடவும், 3 மற்றும் 4-ஆவது மண்டலங்களிலும் பல சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தவிர, மாவட்டம் முழுவதும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் நடந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

இதனிடையே, ஓட்டேரியிலும், விருதம்பட்டிலும் நடந்த சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா். மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், நகா் நல அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காகிதப்பட்டறை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பெண்கள் நூறு பேருக்கு வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு எவா்சில்வா் தட்டு வழங்கினாா். இதில், அக்கட்சியின் மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com