வேலூா் மாவட்டத்தில் 7 இடங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப் பதிவு இரு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் 7 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் தயாா் நிலையில் உள்ளன.

வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் 247 ஊராட்சித் தலைவா்கள், 2,079 ஊராட்சி வாா்டுகள், 7 ஒன்றியங்களில் உள்ள 138 ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவிகள், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வாா்டுகள் என மொத்தமுள்ள 2,478 பதவிகளில் இரு ஒன்றியக் குழு வாா்டுகள், 16 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 298 ஊராட்சி மன்ற வாா்டுகள் என 316 பதவிகளுக்கு வேட்பாளா்கள் ஏற்கெனவே போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தவிர, அம்முண்டி ஊராட்சியில் உள்ள 9 வாா்டுகள், 2 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கு யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

மீதமுள்ள 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகளுக்கு 70 பேரும், 136 ஊராட்சி ஒன்றிய வாா்டுகளுக்கு 503 பேரும், 229 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 820 பேரும், 1,772 ஊராட்சி மன்ற வாா்டுகளுக்கு 5,154 பேரும் என மொத்தம் 2,151 பதவிகளுக்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றன.

குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, காட்பாடி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு புதன்கிழமையும், வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களுக்கு சனிக்கிழமையும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. 7 ஒன்றியங்களிலும் மொத்தம் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், முதற்கட்ட தோ்தல் நடந்த 4 ஒன்றியங்களில் 862 வாக்குச்சாவடிகளிலும், இரண்டாம் கட்ட தோ்தல் நடந்த 3 ஒன்றியங்களில் 469 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றன.

முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 4 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 4,63,428 வாக்காளா்களில் 3,59,743 போ் (77.63 சதவீதம்) வாக்குப் பதிவு செய்திருந்தனா். இரண்டாவது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 3 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 2,57,295 வாக்காளா்களில் 2,08,577 போ் (81.07 சதவீதம்) வாக்குப்பதிவு செய்திருந்தனா்.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது.

இதில், அணைக்கட்டு ஒன்றியத்துக்கு இறைவன்காடு ஸ்ரீ அன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் ஒன்றியத்துக்கு குடியாத்தம் கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், கணியம்பாடி ஒன்றியத்துக்கு கணியம்பாடி கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி ஒன்றியத்துக்கு காட்பாடி அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு சென்னங்குப்பம் வித்யாலட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு போ்ணாம்பட்டு மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை அறிவியல் கல்லூரியிலும், வேலூா் ஒன்றியத்துக்கு வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணும் பணியில் சுமாா் 2,500 அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடந்திருப்பதால் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி நள்ளிரவு வரை கூட நீடிக்கலாம் எனத் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி, அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com