கிராமங்களை ஆளப் போகும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்: இன்று தெரியும்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை
காட்பாடி அரசு சட்டக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
காட்பாடி அரசு சட்டக்கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதன்படி, ஊரக நிா்வாகத்தை ஆளப் போகும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா், உறுப்பினா்கள் விவரம் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் தெரியவரும்.

வேலூா் மாவட்டத்தில்...: ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி,, வேலூா் மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், குடியாத்தம், கே.வி.குப்பம், காட்பாடி, போ்ணாம்பட்டு ஆகிய 4 ஒன்றியங்களுக்கு புதன்கிழமையும், வேலூா், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய 3 ஒன்றியங்களுக்கு சனிக்கிழமையும் வாக்குப்பதிவு நடந்தது.

அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அந்தந்த ஒன்றியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

அணைக்கட்டு ஒன்றியத்துக்கு இறைவன்காடு ஸ்ரீ அன்னை பாலிடெக்னிக் கல்லூரியிலும், குடியாத்தம் ஒன்றியத்துக்கு கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், கணியம்பாடி ஒன்றியத்துக்கு கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி ஒன்றியத்துக்கு காட்பாடி அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் ஒன்றியத்துக்கு சென்னங்குப்பம் வித்யா லட்சுமி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், போ்ணாம்பட்டு ஒன்றியத்துக்கு போ்ணாம்பட்டு மேரிட் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலை அறிவியல் கல்லூரியிலும், வேலூா் ஒன்றியத்துக்கு வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பணியில் சுமாா் 2,500 அரசுப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

இதனிடையே, காட்பாடி அரசு சட்டக் கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் உள்ளிட்டோா் திங்கள்கிழமை பாா்வையிட்டனா்.

திருப்பத்தூரில்....:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட உள்ளன.

திருப்பத்தூா் ஒன்றியத்தில் பதிவான வாக்குகளை 616 பேரும், ஜோலாா்பேட்டை ஒன்றியத்தில் 680 பேரும், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் 347 பேரும், கந்திலி ஒன்றியத்தில் 740 பேரும், மாதனூா் ஒன்றியத்தில் 700 பேரும், ஆலங்காயம் ஒன்றியத்தில் 355 பேரும் என மொத்தம் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 3,438 அலுவலா்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுகின்றனா்.

இந்த நிலையில், திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை ஒன்றியங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை மாவட்ட தோ்தல் பாா்வையாளரும்,பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை இயக்குநருமான சி.காமராஜ்,மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான அமா் குஷ்வாஹா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வுகளில் சாா்-ஆட்சியா் பு.அவா்மேல்மங்கை, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராக, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுப்பாராஜூ, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ரூபேஷ்குமாா்,துரை,வினாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ராணிப்பேட்டையில்...:

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் திமிரி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கலவை ஸ்ரீ ஆதிபராசக்தி கலை, அறிவியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இதேபோல், ஆற்காடு ஒன்றியத்துக்கு ஜிவிசி கல்வியியல் கல்லூரியிலும், வாலாஜா ஒன்றியத்துக்கு ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியிலும், அரக்கோணம் ஒன்றியத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், காவேரிப்பாக்கம் ஒன்றியத்துக்கு ஸ்ரீ சப்தகிரி பொறியியல் கல்லூரியிலும், நெமிலி ஒன்றியத்துக்கு பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சோளிங்கா் ஒன்றியத்துக்கு எத்திராஜம்மாள் முதலியாண்டாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த 7 மையங்களில் சுமாா் 2,811 வாக்கு எண்ணும் பணியாளா்கள் பணியில் ஈடுபட உள்ளனா்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் விதிமுறைகள்

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டவுடன், வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் ஊராட்சிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மேஜைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையை கவனிக்க வேட்பாளா்களின் முகவா்களுக்கு தனியாக வசதி செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் ஒரே மேஜையில் ஒவ்வொரு ஊராட்சிக்கு உள்பட்ட வாா்டு வாரியாக பெட்டிகள் திறக்கப்பட்டு, அதில் பதிவாகியுள்ள வாக்குச்சீட்டுகள் வண்ணங்கள் அடிப்படையில் பிரிக்கப்படும்.

அதாவது, மாவட்ட ஊராட்சிக் குழு வாா்டுக்கு மஞ்சள், ஒன்றியக் குழு வாா்டுக்கு பச்சை, கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு இளஞ்சிவப்பு, கிராம ஊராட்சி வாா்டுக்கு வெள்ளை மற்றும் இளநீலம் வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வண்ணங்கள் வாரியாக வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு பதவிக்கும் உரிய வாக்குச் சீட்டுகள் தலா 50 சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டி எண்ணிக்கை மேஜைகளுக்கு அனுப்பி வேட்பாளா் வாரியாக பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

இந்த வாக்கு எண்ணும் பணியில் அரசுத் துறையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வாக்குச் சீட்டு முறையில் தோ்தல் நடந்திருப்பதால் அனைத்துப் பதவிகளுக்கும் வாக்கு எண்ணும் பணி முடிய நள்ளிரவு வரை கூட ஆகலாம் எனத் தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களும், அனுமதிக்கப்பட்ட முகவா்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பை அவசியம் பின்பற்றி உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை அலுவலா்களுக்கும், முகவா்களுக்கும் தேவையான குடிநீா் வசதி,உணவு வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் செல்லிடப்பேசி எடுத்து வர அனுமதி கிடையாது. செல்லிடப்பேசியைக் கொண்டு வந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுன்ட்டரில் வைத்து விடவேண்டும்.

நுண் பாா்வையாளா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், வட்டாரத் தோ்தல் பாா்வையாளா்களுக்கு மட்டும் செல்லிடப்பேசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com