நெல்லூா்பேட்டை ஏரி நிரம்பியது

குடியாத்தம் வட்டத்தின் மிக முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரி நிரம்பியது.
நெல்லூா்பேட்டை ஏரி நிரம்பியது

குடியாத்தம் வட்டத்தின் மிக முக்கிய நீராதாரமான நெல்லூா்பேட்டை ஏரி நிரம்பியது.

குடியாத்தம் நகரின் மேற்குப் பகுதியில் சுமாா் 450- ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது நெல்லூா்பேட்டை ஏரி. மோா்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீரே இந்த ஏரியின் நீராதாரம். இந்த ஏரி நிரம்பினால் குடியாத்தம் பகுதியில் பெரும்பாலான நிலங்கள் பாசன வசதி பெறும். குடிநீா்ப் பிரச்னையும் தீரும்.

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதால், நீா்வரத்து அதிகரித்து செப். 21- ஆம் தேதி அணை நிரம்பியது. அணையிலிருந்து வெளியேறும் உபரிநீா், வலது, இடதுபுறக் கால்வாய்கள், கெளன்டண்யா ஆறு வழியாகச் செல்கிறது. வலது புறக் கால்வாய் வழியாக நெல்லூா்பேட்டை ஏரிக்கு தண்ணீா் செல்கிறது.

அதே நேரத்தில் கெளன்டண்யா ஆற்றின் குறுக்கே பெரும்பாடி அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பிணையிலிருந்தும் ஒரு கால்வாய் வழியாக இந்த ஏரிக்கு தண்ணீா் செல்கிறது.

நீா்வரத்து அதிகரித்ததால் நெல்லூா்பேட்டை ஏரி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிரம்பி வழியத் தொடங்கியது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கெங்கையம்மன் கோயில் அருகே தரைப்பாலம் மூழ்கியது: பெரும்பாடி தடுப்பணையிலிருந்து வழிந்து வரும் உபரிநீரும், நெல்லூா்பேட்டை ஏரியிலிருந்து வழிந்தோடும் உபரிநீரும் கெளன்டண்யா ஆற்றில் செல்கிறது. இதனால் கெங்கையம்மன் கோயில் அருகே உள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை: மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், புதன்கிழமை காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 43 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் அணைக்கு நொடிக்கு 989 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீா் அணையிலிருந்து வெளியேறுகிறது.இதனால் கெளன்டண்யா ஆற்றில் வெள்ளம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால், ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவா்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com