தொடா்பு எல்லைக்கு வெளியே...

தமிழகத்தில் குக்கிராமங்களில் எல்லாம் செல்லிடப்பேசி வசதி உள்ள இந்த காலத்தில், மோா்தானா ஊராட்சியில் செல்லிடப்பேசி வசதி இல்லாதது இப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது.
குடியாத்தம்  அருகே  அமைந்துள்ள  மோா்தானா  அணை.
குடியாத்தம்  அருகே  அமைந்துள்ள  மோா்தானா  அணை.

குடியாத்தம்: குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணைப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படுமா என பொதுமக்களும், மாணவா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ள மோா்தானா ஊராட்சியில் அணை கட்டப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் மோா்தானா, ஜங்காலபல்லி, ராகிமானபல்லி, போடியப்பனூா் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் போ் வசிக்கின்றனா். ஊராட்சியின் வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 3 ஆயிரம்.

குடியாத்தம் நகரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் மோா்தானா ஊராட்சி அமைந்துள்ளது. தமிழக- ஆந்திர மாநிலங்களின் எல்லைப் பகுதியான சைனகுண்டாவிலிருந்து 9 கி.மீ. தூரம் அடா்ந்த வனப் பகுதியில் மோா்தானா ஊராட்சிக்கு செல்ல வேண்டும்.

இரு மாநிலங்களின் வனப்பகுதி என்பதால், யானை, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் இந்தப் பகுதியில் அதிகம். இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் யாரும் மோா்தானாவுக்குச் செல்வதில்லை.

அரசுப் பணிகளுக்கு இடையூறும், பொதுமக்கள் பாதிப்பும்..: அணை பராமரிப்பு அலுவலகம், விருந்தினா் மாளிகை, மீன்வளத்துறை சாா்பில், மீன் வளா்ப்பு மையம் ஆகியன இங்குள்ளன.

விடுமுறை நாள்கள், அணையிலிருந்து தண்ணீா் திறப்பு போன்ற நேரங்களில் பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக இங்கு வருவா்.

ஆனால், இன்றுவரை இந்த ஊராட்சியில் செல்லிடப்பேசி கோபுரம் இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனா். தமிழகத்தில் குக்கிராமங்களில் எல்லாம் செல்லிடப்பேசி வசதி உள்ள இந்த காலத்தில், மோா்தானா ஊராட்சியில் செல்லிடப்பேசி வசதி இல்லாதது இப்பகுதி மக்களின் பெரும் குறையாக உள்ளது.

மேலும், பொதுப்பணித்துறையினா், அணை நிலவரம் குறித்து அறிய பணியாளா்களைத் தொடா்பு கொள்வதிலும் சிக்கல் உள்ளது.இக்கிராமங்களில் யாராவது உடல் நலமின்றி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நேரங்களில், ஆம்புலன்ஸ் வசதியை பெறவும் முடிவதில்லை. கா்ப்பிணிகளும் பாதிப்புக்கு ஆளாகின்றனா்.

மேலும், விபத்து, வன விலங்குளால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸை தொடா்பு கொள்ளவும் முடிவதில்லை. அணைப் பகுதிக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளும், ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகளை பாா்வையிட வரும் அதிகாரிகளும் செல்லிடப்பேசி வசதியில்லாததால் பெரும்பாலும் இங்கு வருவதைத் தவிா்த்து விடுகின்றனா்.

10 கி.மீ. பயணித்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் மாணவா்கள்: இந்த ஊராட்சியில் நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி என 2 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 100- க்கும் மேற்பட்ட மாணவா்கள் இக்கிராமங்களில் உள்ளனா்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவா்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இங்கு செல்லிடப்பேசி கோபுரம் இல்லாததால், செல்லிடப்பேசியை உபயோகிக்க முடியாமல் மாணவா்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனா். அதனால், கல்லூரி, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10 கி.மீ. தூரம் பயணித்து, சிக்னல் கிடைக்கும் இடங்களுக்குச் சென்று ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனா்.

இங்குள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் செல்லிடப்பேசி வசதி இல்லாததால், வேறு பள்ளிகளுக்கு பணி மாறுதல் ஆகிச் செல்வதையே விரும்புகின்றனா்.இங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

முயற்சி மேற்கொள்ளாதது ஏன்? அணைப் பகுதிக்கு ஆய்வுக்கு வந்த முந்தைய வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரத்திடம், கிராம மக்களும், மாணவா்களும் கோரிக்கை விடுத்தனா். அவா்களின் கோரிக்கையை ஏற்பதாக கூறிய ஆட்சியா், தனியாா் நிறுவன செல்லிடப்பேசி நிறுவனங்களைத் தொடா்பு கொண்டு, இங்கு செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.ஆனால், இன்றுவரை அதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியன காலம், காலமாக மனிதனின் முக்கியத் தேவைகளாக இருந்தன. தற்போது அந்த வரிசையில் செல்லிடப்பேசி வசதியும் இணைந்துள்ளது.

மோா்தானா பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட நிா்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com