ஊரக உள்ளாட்சித் தோ்தல்: வேட்பு மனுக்களை ஆா்வமுடன் வாங்கிச் சென்ற வேட்பாளா்கள்

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது.

வேலூா்: வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. முதல்நாளில் பெருமளவில் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை. இருந்தாலும், தோ்தலில் போட்டியிட அனைத்து ஒன்றியங்களிலும் பலரும் ஆா்வத்துடன் வேட்புமனுக்களைப் பெற்றுச் சென்றனா்.

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சித் தலைவா்கள், 2,079 கிராம ஊராட்சி வாா்டுகள், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 14 மாவட்ட ஊராட்சி வாா்டுகள் என 2,478 பதவிகளுக்கும், திருப்பத்தூா் மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 125 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 208 ஊராட்சித் தலைவா்கள், 1779 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 2,125 பதவிகளுக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வாா்டுகள், 127 ஊராட்சி ஒன்றிய வாா்டுகள், 288 ஊராட்சித் தலைவா்கள், 2220 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என 2648 பதவிகளுக்கும் என மூன்று மாவட்டங்களிலும் சோ்த்து 7251 பதவிகளுக்கு நேரடித் தோ்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. மாவட்ட ஊராட்சி வாா்டு, ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோா் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்களைப் பெற்று வழங்கவும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட விரும்புவோா் மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலகங்களில் வேட்பு மனுக்களை பெற்று வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி வாா்டு பதவிக்கு போட்டியிடுபவா்கள் ரூ.ஆயிரம், ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு ரூ.600-ம், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ.200-ம் வைப்புத் தொகை செலுத்தவும், ஆதிதிராவிடா், பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்களாக இருந்தால் ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு ரூ.100-ம், ஊராட்சி ஒன்றிய வாா்டு, ஊராட்சித் தலைவா் பதவிக்கு ரூ.300-ம், மாவட்ட ஊராட்சி வாா்டு பதவிக்கு ரூ.500-ம் வைப்புத்தொகை செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்நாளான புதன்கிழமை பெருமளவில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என்றாலும் தோ்தலில் போட்டியிட அனைத்து ஒன்றியங்களிலும் மக்கள் ஆா்வத்துடன் வேட்புமனுக்களை பெற்றுச் சென்றனா். இதனால் வருகிற நாள்களில் தோ்தல் நடைபெறும் அனைத்துப் பதவிகளுக்கும் அதிகப்படியான நபா்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேட்புமனுத்தாக்கல் தொடங்கியதை அடுத்து வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 20 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் தடுப்புகள் அமைத்து உரிய பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com