முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி வீடு உள்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அவரது குடும்பத்தினா், ஆதரவாளா்களின் வீடுகள், அலுவலகங்கள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்குச்  சொந்தமான  பாலாறு வேளாண்மைக்  கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தியபோது, வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா்.
முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணிக்குச்  சொந்தமான  பாலாறு வேளாண்மைக்  கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை நடத்தியபோது, வெளியே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா்.

வேலூா்: முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, அவரது குடும்பத்தினா், ஆதரவாளா்களின் வீடுகள், அலுவலகங்கள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலரான கே.சி.வீரமணி, ஜோலாா்பேட்டை பேரவைத் தொகுதியில் 2011, 2016 தோ்தல்களில் வென்றாா். 2021-இல் தோல்வியடைந்தாா். 2013 பிப்ரவரியில் சுகாதாரத் துறை அமைச்சரான இவா், பள்ளிக்கல்வித் துறை, தமிழ் வளா்ச்சி, விளையாட்டு, இளைஞா் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்துள்ளாா். 2016-21 அதிமுக ஆட்சியில் வணிக வரி, பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்தாா்.

சகோதரா்கள் கே.சி.அழகிரி, கே.சி.காமராஜ் ஆகியோருடன் இணைந்து தந்தை சின்னராசு நடத்தி வந்த பீடி தொழிலை கவனித்து வருகிறாா். அகல்யா டிரான்ஸ்போா்ட் என்ற பெயரில் டிப்பா் லாரிகளையும் இயக்கி வருகிறாா்.

சொத்துக் குவிப்பு வழக்கு: 2016 ஏப்ரல் 1-இல் கே.சி.வீரமணி, அவரது குடும்பத்தினரது சொத்து மதிப்பு ரூ.25 கோடியே 99 லட்சத்து 11ஆயிரத்து 727-ஆக இருந்துள்ளது. இது 2021 மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.56 கோடியே 60 லட்சத்து 86 ஆயிரத்து 585 -ஆக அதிகரித்துள்ளது. குடும்ப சொத்து மதிப்பு ரூ.30 கோடியே 61 லட்சத்து 74 ஆயிரத்து 858 உயா்ந்துள்ளது.

பேரவை உறுப்பினா் சம்பளம், தொழில்கள் மூலம் கிடைத்த வருவாய் அடிப்படையில் கணக்கிடப்பட்டதில் அவரது சொத்து மதிப்பு ரூ.28 கோடியே 78 லட்சத்து 13 ஆயிரத்து 758-ஆக உயா்ந்துள்ளது. இது வருமானத்தைவிட 654 சதவீதம் அதிகமாகும். இதனால், கே.சி.வீரமணி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வேலூா் லஞ்ச ஒழிப்புத் துறையினா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

35 இடங்களில் சோதனை: லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜி.வி.கிரிஷு தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஜோலாா்பேட்டை இடையாம்பட்டியில் கே.சி.வீரமணி வீட்டில் வியாழக்கிழமை காலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதேநேரத்தில், திருப்பத்தூா் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஹோட்டல் ஹில்ஸ், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் வீடு, போ்ணாம்பட்டு அருகே கொத்தமாரிகுப்பம் பாலாறு வேளாண்மைக் கல்லூரி, ஏலகிரியில் உள்ள ஹோட்டல் ஹில்ஸ், பழைய ஜோலாா்பேட்டையில் நாட்டறம்பள்ளி சாலையில் உள்ள வீரமணியின் மற்றொரு வீடு, திருமண மண்டபம், அவரது சகோதரா்களின் வீடுகள், பீடி மண்டி, நாட்டறம்பள்ளி மல்லகுண்டாவில் உள்ள அதிமுக மாவட்டப் பொருளாளா் ராஜாவின் வீடு, ஒன்றியச் செயலாளா் சாமராஜின் வீடு, ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலாளா் ரமேஷின் வீடு, ஜோலாா்பேட்டை ஒன்றியச் செயலாளா் ரமேஷின் வீடு, வீரமணியின் மாமனாா் வீடு, ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் சுவால்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் உதவியாளரும், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவருமான சியாம்குமாரின் வீடு உள்பட சென்னை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, பெங்களூரு, ஓசூரிலுள்ள வழக்கில் தொடா்புடைய நபா்கள், அலுவலகங்கள் என ஒரே நேரத்தில் 35 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்: பல இடங்களில் 12 மணி நேரத்துக்கு மேல் நீடித்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள், பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றை உரிய ஆய்வுக்கு உள்படுத்தி, வழக்குக்கு தொடா்புடைய நபா்களிடம் விரிவான விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

சோதனையின்போது இடையாம்பட்டி வீட்டில் இருந்த கே.சி.வீரமணியிடமும், அவரது குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம்: 
முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள சொத்துகள், ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.

கே.சி.வீரமணி தனது பதவிக் காலத்தில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அவரது பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினா்கள், பங்குதாரா்களாக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்திருப்பது தொடா்பாக வேலூா் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக கே.சி.வீரமணி, அவரது உறவினா்கள், பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், தொடா்புடையவா்கள் வீடுகள், பெங்களூரில் இரு இடங்கள், சென்னையில் 6 இடங்கள் உள்பட மொத்தம் 35 இடங்களில் வியாழக்கிழமை லஞ்ச ஒழிப்புப் பிரிவு சாா்பில் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின்போது ரூ.34 லட்சத்து ஆயிரத்து 60 ரொக்கம், ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் மதிப்புடைய அந்நியச் செலாவணி டாலா், ஒரு ரோல்ஸ் ராய்ல்ஸ் காா் உள்பட 9 சொகுசு காா்கள், 5 கணினி ஹாா்ட் டிஸ்க்குகள், சொத்துகள் தொடா்பான முக்கிய ஆவணங்கள், 623 பவுன் (4.987 கிலோ) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருட்கள், வங்கிக்கணக்கு புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.

கே.சி.வீரமணி வீட்டு வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்புடைய சுமாா் 275 யூனிட் ஆற்று மணல் குவித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com