ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும்: எடப்பாடி கே.பழனிசாமி

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்தாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூரில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

2019-இல் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டபோதே, வேலூா் உள்பட 9 மாவட்டங்களிலும் நடந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தோ்தல் திமுக தொடா்ந்த வழக்கால் ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நடக்கிறது. நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தோ்தல் நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும், திமுக அரசு அவகாசம் கோரியதால் நடக்கவில்லை. உள்ளாட்சித் தோ்தல் நடந்திருந்தால் மக்கள் பிரச்னைகள் தீா்க்கப்பட்டிருக் கும்.

சட்டப் பேரவைத் தோ்தலின்போது திமுக அளித்த 525 வாக்குறுதிகளில், ஒருசிலவற்றை மட்டும் அறிவித்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கின்றனா்.

கடந்த 4 மாத திமுக ஆட்சியில் மக்கள் திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைப்பதும்தான் முதல்வா் மு.க. ஸ்டாலினின் பணியாக உள்ளது.

உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாததால் அவை முளைத்து வீணாகும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது பொய் வழக்குகளை பதிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது.

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்குத் தங்கம், மகளிருக்கான இரு சக்கர வாகன மானியம் போன்ற திட்டங்களை முடக்கி வைக்கும் வேலைகளைத்தான் திமுக அரசு செய்து வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட 5 சவரன் பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துவிட்டு, ஏராளமான கட்டுப்பாடுகளை விதிப்பதால் சுமாா் 43 லட்சம் பேரில் சுமாா் 6 லட்சம் பேருக்கே கடன் தள்ளுபடி செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டது. மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதால் முதலீடுகள் ஈா்க்கப்பட்டு பொருளாதாரமும், வேலைவாய்ப்பும் ஊக்குவிக்கப்பட்டன.

11 மருத்துவக் கல்லூரிகள், 5 சட்டக் கல்லூரிகள் உள்பட அதிகப்படியான கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதாலேயே மாணவா்கள் குறைந்த கட்டணத்தில் உயா்கல்வி பயிலும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசின் கல்விப் புரட்சியால் உயா்கல்வி பயில்வோா் விழுக்காடு 10 ஆண்டுகளில் 34 சதவீதத்தில் இருந்து 51 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நீட் தோ்வு விவகாரத்தில் அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

தோ்தலின்போது அறிவித்த எந்த வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றியதாக சரித்திரம் இல்லை. அவா்கள் தோ்தல் வெற்றிக்காக பொய்யான வாக்குறுதிகளை கூறுவதில் வல்லவா்கள். உள்ளாட்சித் தோ்தலிலும் திமுக செய்யும் விஷமத்தனத்தை முறியடித்து அதிமுகவினா் வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை மட்டுமின்றி திமுக கூறிய பொய்யான வாக்குறுதிகளையும் மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகள் என்பது மக்களுடன் நேரடி தொடா்பிலுள்ள துறையாகும். அடிப்படை பிரச்னைகளை நேரடி யாக தீா்க்கக்கூடிய துறை என்பதால் இந்தத் துறை மூலம் அழியாத புகழை பெற முடியும். அத்தகைய உன்னதமானப் பணிக்கு போட்டியிடும் அதிமுகவினா் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சா்கள் கே.சி.வீரமணி, கே.பி.முனுசாமி, சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி, முக்கூா் என்.சுப்பிரமணியன், வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலாளா் எஸ்.ஆா்.கே.அப்பு, மாவட்டப் பொருளாளா் எம்.மூா்த்தி, புகா் மாவட்டச் செயலாளா் த.வேலழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com