மயானப் பாதையை மீட்டுத் தரக் கோரி வேப்பம்பட்டி கிராம மக்கள் மனு

ஆக்கிரமிக்கப்பட்ட மயானப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்று வேப்பம்பட்டி கிராம மக்கள், வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்

ஆக்கிரமிக்கப்பட்ட மயானப் பாதையை மீட்டுத் தர வேண்டும் என்று வேப்பம்பட்டி கிராம மக்கள், வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கணியம்பாடி அடுத்த வேப்பம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனு:

வேப்பம்பட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வந்த மயானத்துக்குச் செல்லும் பாதையை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். மயான பாதையை மீட்டுத் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்காட்டான் குடிசை கிராம மக்கள் அளித்த மனு: ஆற்காட்டான் குடிசை கிராமத்தில் சுமாா் 2,000 மக்கள் வசித்து வருகின்றனா். தற்போது கிராமத்தில் உள்ள நீா்த்தேக்கத் தொட்டி பழுதடைந்துள்து. எனவே, 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கெனவே உள்ள நீா்த்தேக்கத் தொட்டிக்கு அருகில் உள்ள பொது இடத்தில் கட்டுவதற்கு கிராமத்தில் உள்ள சிலரும் இடம் வழங்கினா். அந்த இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட சிலா் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். அதே இடத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், வீட்டுமனைப் பட்டா, மின்சார வசதி, சாலை வசதி, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 361 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

காட்பாடியைச் சோ்ந்த 10 பேருக்கும், வேலூரைச் சோ்ந்த 3 பேருக்கும் ஸ்மாா்ட் குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். மேலும், சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வென்று, மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கச் செல்லும் வேலூா் மாணவிகளை அவா் பாராட்டினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் ப.சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com