ஏலம் கோர யாரும் முன்வராததால் பொய்கைச் சந்தையில் அதிகாரிகளே சுங்கம் வசூல்

பொய்கை கால்நடை சந்தையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெற 4 முறை ஏலம் நடத்தியும் யாரும் முன்வரவில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை நடந்த சந்தையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும்

பொய்கை கால்நடை சந்தையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் பெற 4 முறை ஏலம் நடத்தியும் யாரும் முன்வரவில்லை. இதனால், செவ்வாய்க்கிழமை நடந்த சந்தையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் பணியில் அதிகாரிகளே ஈடுபட்டனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி, வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவது வழக்கம்.

இதேபோல், கால்நடைகளை வாங்கவும், விற்கவும் பொய்கை சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள், கேரளம், ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் இருந்து வியாபாரிகளும், விவசாயிகளும் அதிகளவில் கூடுவா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இதேபோல், கால்நடைகளை வாங்க வியாபாரிகளும் அதிகளவில் வந்திருந்ததால் வியாபாரம் சிறப்பாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, பொய்கைச் சந்தையில் வியாபாரிகளிடம் இருந்து சுங்கக்கட்டணம் வசூலிக்க ஆண்டுக்கு ஒருமுறை வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் ஏலம் நடத்தப்படும். கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரு ஆண்டுகளாக ஏலம் நடத்தப்படவில்லை.

2022-23-ஆம் ஆண்டுக்கான ஏலம் கடந்த மாதம் அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 4 முறை நடந்தது. ஆனால், ஏலதாரா்கள் சந்தையில் அடிப்படை வசதியில்லை, மாடுகள் வரத்து குறைவு என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக்கூறி, ஏலத்தொகையை குறைக்கும்படி கோரினா். ஆனால், ரூ. 99 லட்சத்துக்கு மேல் ஏலம் கேட்பவா்களுக்கு மட்டுமே சுங்கக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் அளிக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 4 முறை நடந்த ஏலத்தில் அதிகபட்சம் ரூ. 60.24 லட்சத்துக்கு மேல் யாரும் ஏலம் கேட்காததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

அதேசமயம், ஏற்கெனவே ஏலம் எடுத்தவருக்கான சுங்கக் கட்டணம் வசூலிப்பதற்கான அவகாசம் கடந்த மாதத்துடன் நிறைவடைந்தது.

இதனால், செவ்வாய்க்கிழமை நடந்த சந்தையில் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட பணியாளா்களே சுங்கக் கட்டணம் வசூல் செய்தனா். அப்போது, 2 மாடுகளை ஏற்றி வரும் வாகனத்துக்கு ரூ. 1100-ம், 4 மாடுகளை ஏற்றி வந்தால் ரூ. 210-ம், ஒரு கோழி விற்பனை செய்ய ரூ. 15-ம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதேபோல், அங்குள்ள கடைகளுக்கும் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

எனினும், ஏராளமான வியாபாரிகள், பொதுமக்கள் வந்து செல்வதால் பொய்கை வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com